சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழ்த் திரைப் படங்களின் வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி யுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என தெரிவித்துள்ளார்.
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..
— Udhay (@Udhaystalin) April 17, 2018