சென்னை: கோபாலபுரத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை திடீரென வந்திருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
உடல் நலம் குன்றி கோபால புரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அண்மைக் காலமாக கட்சி நிர்வாகிகளையும், சில தொண்டர்களையும் சந்திக்க வைத்து வருகிறார்கள் குடும்பத்தினர். வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது சில முக்கிய நிர்வாகிகளை சந்திக்க வைக்கிறார்கள்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதி, அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு இருந்த தொண்டர்களை சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. தற்போது மீண்டும் அவர் அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார். கருணாநிதியுடன் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
அங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்தார். அவரின் இந்த திடீர் விசிட்டால் தொண்டர்கள் சந்தோசம் அடைந்திருக்கிறார்கள். இந்த மாதத்தில் அவர் இரண்டாவது முறையாக அறிவாலயம் சென்றார் என்பதும், குறிப்பாக அவருக்கு விருப்பமான கிரிக்கெட் மேட்ச் பார்த்தார் என்பதும் சமூக இணையதளங்களில் பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.
காவிரிக்காக ஐபிஎல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது என்று விடாப்பிடியாகப் பிடித்து சென்னையை விட்டு ஐபிஎல் போட்டிகளை விரட்டி அடித்தன திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இந்நிலையில், தமக்கு மிகவும் விருப்பமான சென்னை சூபர் கிங்க்ஸ் அணியின் போட்டியை அறிவாலயத்தில் விரும்பிப் பார்த்தார் கருணாநிதி என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் கிரிக்கெட் பார்க்கும் வீடியோவும் வெளியிடப் பட்டுள்ளது.
சென்னையின் மற்ற மக்கள் எவரும் அரங்கத்துக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கக் கூடாது, ஆனால், வழக்கம் போல் தாங்கள் மட்டும் டிவியில் தொடர்ந்து போட்டிகளைப் பார்ப்போம் என்று திமுக., செயல்படுவது, வழக்கம் போல் அதன் இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!