அதிமுக., வின் அதிகார பூர்வமான நாளேடான டாக்டர் நமது அம்மா நாளிதழில் இடம் பெற்ற ஒரு கட்டுரையில், அதிமுக., பாஜக., கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகின. இது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது அம்மாவில் வெளியான கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள்…
அதிமுகவும் பாஜக.,வும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. இந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்படுவதற்கான பாதைகள் வகுக்கப்பட்டுவிட்டன. பயணத் திட்டத்தை கட்சியின் தலைமை முடிவு செய்யும். – என்று எழுதப் பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையை எழுதியவர் தனிப்பட்ட கட்டுரையாளர். ஆனால் பிரசுரிக்கப்பட்டது டாக்டர் நமது அம்மாவில்தான். எனவே இது பெரும் எதிர்பார்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக-பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுகின்றன என்று அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் அறிவிப்பு வெளியானது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிம் கேள்வி எழுப்பப் பட்டது.
இது குறித்து பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழில் கட்டுரை எழுதியவர் பாஜகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது. அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது கட்டுரை மட்டுமே!
கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் கூறுவது நடக்காது. ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்! என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.