நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்குநேரி அருகே சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் துரை தெற்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் எஸ்.பி.யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாண்டிச்சேரி கிராமம் அருகே உள்ள நம்பியாற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.
இதை அடுத்து, நேற்றிரவு நம்பியாற்றுப் பகுதிக்கு காவலர் ஜெகதீஷ் துரை ரோந்து பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவலர் ஜெகதீஷ் கண்டித்ததுடன், அவர்களை கைது செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், இரும்பு கம்பியால் காவலர் ஜெகதீஷ் துரையின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். கடுமையாகத் தாக்குதலுக்கு ஆளான ஜெகதீஷ் துரை ரத்த வெள்ளத்தில் சரிந்து, அதே இடத்தில் துடி துடித்து உயிரிழந்துள்ளார்.
இரவு ரோந்துப் பணிக்கு சென்ற காவலர் காலை வரை காவல் நிலையம் வரவில்லை என்பதால், சக காவலர்கள் நம்பியாறு பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்கே காவலர் ஜெகதீஷ் சடலமாகக் கிடந்ததைக் கண்டுள்ளனர். இதன் பின் அவரது உடலை மீட்ட போலீசார், நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதை அடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார், அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
தொடந்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கக்கன் நகரைச் சேர்ந்த முருகன், மாடசாமி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அந்த கும்பலில் இருந்து தப்பியோடிய கூட்டாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.