சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்க தலைவரும், பாமக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு காலமானார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் காடுவெட்டி குரு. அவரை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தினமும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து உடல் நலம் குறித்து ஆலோசித்து வந்தார். மேலும், பாமக., நிறுவுனர் ராமதாஸும், மருத்துவமனைக்குச் சென்று காடுவெட்டி குருவைப் பார்த்து நலம் விசாரித்தார்.
காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் காடுவெட்டி குரு உடல் நிலை குறித்து ஒரு வதந்தி பரவியது. இது குறித்து பாமக., வினர் விளக்கம் அளித்தபோது, காடுவெட்டி குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. தற்போது அவரது உடல் நிலை மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று கூறினர்.
இந்நிலையில், இன்று இரவு காடுவெட்டி குரு காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காடுவெட்டி குரு மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.




