சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என ரஜினிகாந்த் உண்மையை பட்டவர்த்தனமாகப் பேசியது, சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
பலரும் பேசத் தயங்கும் உண்மையை, பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல், மனதில் பட்டதை தெளிவாகச் சொன்ன ரஜினிகாந்துக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தூத்துக்குடியில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் ரஜினியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தபோது, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம். பிரச்சனை தொடங்கியதே சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்த பின்னர் தான்.
சமூக விரோதிகள் தான் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடியது. அவர்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்ததும் சமூக விரோதிகள் தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல் கடைசி நாளில் சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நுழைந்துள்ளனர்… என்றார் ரஜினி.
அவர்கள் சமூக விரோதிகள்தான் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று என்னிடம் கேட்காதீர்கள், எனக்குத் தெரியும் என்ற ரஜினிகாந்த், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். காவல்துறையினரை சமூக விரோதிகள்தான் தாக்கினர். எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று திட்டவட்டமாக, உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி.




