சென்னை: சென்னை ஆவடியில் மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ஆவடியில் மத்திய அரசின் கனரக வாகனத் தொழிற்சாலை – எச்.வி.எஃப்பில் டெக்னீசியன்கள் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எழுத்துத் தேர்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறைத் தேர்வு ஆவடி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், சான்றிதழ் சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்தார். அப்போது, எழுத்துத் தேர்வில் பதிவு செய்யப்பட்ட கைரேகைகளையும், சான்றிதழ் சரிபார்க்க வந்தவர்களின் கைரேகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் (30), பிரபாத்குமார் (26), சந்தன்குமார் (23) ஆகியோரின் கைரேகைகள் பொருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி காவல் உதவி ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணி எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari