ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றிலுமுள்ள மூன்று கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமரகிரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50 பேர் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில்,
“எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை சார்பில், எங்கள் பகுதியில் பல்வேறு சமுதாய பணிகள் செய்யப்பட்டன. எங்களுக்கு ஆலையின் சார்பில் தண்ணீர் வழங்கப் பட்டது. இப்போது ஒரு மாதமாக கார்ப்பரேஷன் தண்ணீர் கூட எங்களுக்கு வரவில்லை. தற்போது, ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லாரி உரிமையாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியவில்லை. லாரிகள் மற்றும் சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.




