சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்றியது நீதிமன்ற அவமதிப்பு செயல்: உயர் நீதிமன்றம்

Published:

16 June03 high court - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவு என்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த அரசாணை ஒரு நிமிடம் கூட  அமலில் இருக்க அனுமதிக்க முடியாது; இது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று கூறியது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தமிழக ஆலயங்களில்  சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பொன். மாணிக்கவேலை இடமாற்றம் செய்தது தமிழக அரசு. ஆனால், நீதிமன்றம் தங்கள் கண்காணிப்பில் இந்த வழக்கை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகுவதாகக் கூறியது. இதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் பணியைத் தொடர்ந்த பொன்மாணிக்கவேல்  விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு கூறியது. மேலும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றித் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை இன்று மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம், யாரையோ காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று கூறினார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும், அந்த அமைப்புக்கு இதுவரை போதுமான ஒத்துழைப்பு அளிக்காத தமிழக அரசு, தற்போது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும்  நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். முன்னர் அவரே இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், தடை விதிக்கக் கூடாது, விரிவான முறையில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அப்போது, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து ஓர் ஆண்டு ஆகியும் அரசு ஒத்துழைப்பு வழங்காதது ஏன்? சிலை கடத்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த 23 உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. தற்போது அந்த வழக்குகளை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி மகாதேவன்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்கும்; போலீஸ் விசாரணையில் இருக்கும் வழக்குகளையும் புதிய வழக்குகளையுமே சி.பி.ஐ. விசாரிக்கும் என்று  விளக்கம் அளித்தார்.

ஆனால் அவரது விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தமிழக அரசின் இந்த அரசாணை ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது; சி.பி.ஐ.க்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப் படுகிறது; தமிழக அரசு விரிவான பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று  ஒத்தி வைத்தனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img