சென்னை: விநாயகர் சிலை வைப்பதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலை வைப்பதற்கான 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கடந்த 9ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசாணையை எதிர்த்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் செல்ல நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விநாயகர் சிலை வைக்கவுள்ளோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் சென்னையில் துணை ஆணையர், மாவட்டங்களில் டிஎஸ்பியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில், உடனுக்குடன் பரிசீலித்து, விநாயகர் சிலை வைப்பதில் எந்த வித பிரச்னையும் நேராமல் பார்த்துக் கொள்வதாக அரசுத் தரப்பில் கூறப் பட்டிருந்தது! இதை அடுத்து, அரசின் நடவடிக்கை தங்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளிப்பதாக, இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
கடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது!




