செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து நெல்லை சரக டிஜஜி., கபில் குமார் சராட்கர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், நெல்லை நகர துணை ஆணையர் சுகுணா சிங் மேற்பார்வையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 டி எஸ்பிகள், 11 ஆய்வாளர்கள் , 34 உதவி ஆய்வாளர்கள், 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் அழைப்பு ஊர்வலத்தின் போது, இஸ்லாமியக் குழுக்கள் விநாயகர் மீதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அசம்பாவிதம் ஏதும் இன்றி அமைதியாக நடத்தி முடித்திட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. செங்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகர் சிலை அமைப்புக் குழுவினரை அழைத்து, கூச்சலிடக் கூடாது, மேள தாளம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் தேவையற்ற முறையில் ஆடக் கூடாது, எவரும் மது அருந்தி வரக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறையினர், அமைதியான முறையில் விசர்ஜன ஊர்வலம் இன்று நடந்திட ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே இன்று காலை முதல் செங்கோட்டை நகரில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு நாள் என்பதாலும், இன்று விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் என்பதாலும், நேற்றைய பதற்ற சூழல் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. செங்கோட்டை பஜார், மேலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.




