கேரளாவில் பொது வேலைநிறுத்தம் : தமிழக எல்லையில் லாரி–பஸ்கள் நிறுத்தம்

கேரளாவில் பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்தில் வாகனங்களுக்கான பிரீமியம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொது வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கமும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக கேரள மாநிலத்தில் இன்று பஸ், கார், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள் இன்று நிறுத்தப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரி, கார் மற்றும் வாகனங்கள் தமிழக–கேரள எல்லையான புளியறை சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதைப்போல செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு ரப்பர், தோட்ட வேலைகளுக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்களும் இன்று வேலைக்கு செல்லவில்லை. புளியறை சோதனைசாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.