நாகூர் ஹனீபா உடலுக்கு கருணாநிதி அஞ்சலி

சென்னை: திமுகவின் பிரசார பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிஃபா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் ஹனிபா இரவு 8 மணியளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஹனீபா மரணம் குறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஹனிபா மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, எனது ஆருயிர் நண்பரும், எனது இளமைக் காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான சகோதரர் ஹனீபா நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்றார் கண்ணீர் மல்க.