நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.
ஆறுமுகத்திற்கு நெல்லை தச்சநல்லூரை அடுத்துள்ள ராஜவள்ளிபுரம் பகுதியை சார்ந்த சுந்தரியை 2வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தப் பகுதிக்கு குடி வந்துள்ளனர்.
இந்நிலையில் மனைவி சுந்தரியின் நடத்தை மீது கணவன் ஆறுமுகத்திற்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மனைவியை ஆறுமுகம் தாக்கியுள்ளார். இதில் சுந்தரி இறந்து விடவே யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த கழிப்பிடத்தின் தொட்டியில் அவரது உடலைப் போட்டு மூடி விட்டார். பின்னர், சுந்தரியின் அண்ணன் வளவி என்பவருக்கு போன் செய்து, உன் தங்கையை கொலை செய்துவிட்டேன், பிணம் வீட்டிலுள்ள கழிப்பிட தொட்டியில் கிடக்கிறது என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து சுந்தரியின் அண்ணன் வளவி ஊத்துமலை போலீசுக்கு தகவல் சொல்லி விட்டு ஊரிலிருந்து விரைந்து வந்துள்ளார். உடனடியாக ஊத்துமலை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பாளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் வளவியின் புகாரின் பேரில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளி ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.




