
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வருடந்தோறும் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், இந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.
கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வருடம் தோறும் மஹா சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம். இந்த விழாவில் லட்சக்கணக்கில் அன்பர்கள் பங்கேற்கின்றனர். காட்சி ஊடகங்களில் நேரலையாகவும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில், நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்..
ஈஷா யோகா மையத்தில் இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2017ல் பிரதமர் மோடி திறந்துவைத்த 112 அடி ஆதியோகி சிலை மைதானத்தில் இந்த முறை மஹாசிவராத்திரி விழா நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் விழாவில், நள்ளிரவு தியானம், இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் குறிப்பிடத் தக்க அம்சமாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.



