நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் வேல்சாமி தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பி.பி.எம் முருகேசன் வரவேற்புரை வழங்கினார். ரோட்டரி மாவட்ட செயலாளர் செல்வகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த இலவச பொது மருத்துவ முகாமில் இருதய சிகிச்சை நிபுணர் கிரண்சுகுலால், புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் க்ரீஷ், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சகாய ஜோஸ், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 840 நபர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 40 நபர்களுக்கு இதய அறுவைசிகிச்சை மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட இலவச அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில், பொதுமருத்துவம், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், புற்றுநோய், சுகர், பிபி டெஸ்ட், இருதய பரிசோதனைகளான இசிஜி டெஸ்ட், எக்கோ டெஸ்ட் எடுக்கப்பட்டது.
இரண்டாம் ஆண்டு நடத்தப்படும் இந்த இலவச மருத்துவ முகாமில் செங்கோட்டை, புளியரை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



