
அரவக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஜூன் 3-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: அரவக்குறிச்சியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்
என்றும், ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவில்லை. சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்றும், மோடி போட்ட பிச்சையாலும் தான் அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்றும் கடுமையாக பேசினார்.
விவசாயக் கடன் ரத்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நீட் ரத்து, கல்வி மற்றும் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.
திமுகவில் இணைந்தனர் இதற்கிடையில், அய்யம்பாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.



