
நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 40). இவர் நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்து பார்த்த சுடலைகண்ணுவை 8 பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சுடலைக்கண்ணுவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சுடலைக்கண்ணு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்டு உள்ளார்.
அந்த முன்விரோதத்தில் அவரை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுடலைக்கண்ணுவை வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



