
சென்னை வண்ணாரப்பேட்டையில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் என்.என். தோட்டம் சின்ன மார்க்கெட்டில் பழம் வியாபாரம் செய்து வருபவர் உஷா. இவரிடம் இளைஞர் ஒருவர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து பழம் வாங்கினார்.
அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த உஷா, அது கள்ளநோட்டு என்பதை கண்டுபிடித்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த முகமது ரபீக்(வயது 25) என்பதும், பாரிமுனையில் உள்ள ஜவளிக்கடையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர், பழக்கடையில் பெண் வியாபாரி உஷாவிடம் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைதான முகமது ரபீக், கடந்த 6 மாதங்களாக சின்ன மார்க்கெட்டில் இதுபோல் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றி புழக்கத்தில் விட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



