சென்னையில் மீண்டும் ‘காதல்’ பயங்கரம்! இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சி!

Published:

chennai lover affair lady snabed - 2026

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவமாக, இளம் பெண்ணை  அரிவாளால் வெட்டியவன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

தன்னைக் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை ரயில் நிலையத்தில் ஓடஓட இளைஞன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சென்னை சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் துரத்தியதை அடுத்து அந்த இளைஞனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம். எழும்பூருக்கு அடுத்து உள்ளது என்பதும், அருகில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இருப்பதாலும் சேத்துப் பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வோர் அதிகம்.

இந்நிலையில் நேற்று இரவு 7.50க்கு இளம் பெண் ஒருவர் மின்சார ரயிலில் ஏறுவதற்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்து வந்தார். அந்த நபர், அந்த இளம் பெண்ணை வழிமறித்து ஏதோ பேச முயன்றார். அதற்கு அந்த இளம் பெண் அந்த இளைஞரைத் திட்டியபடி ரயில் நிலையத்திற்குள் வேகமாக வந்தார்.

இருப்பினும், அந்தப் பெண்ணை விடாமல் தொடர்ந்து வந்த இளைஞர், இளம் பெண்ணின் கையை பிடித்து, அவரை நிற்கும் படி  வற்புறுத்தினார். அப்படியும் அந்தப் பெண் விலகிச் சென்றுவிடவே, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை வழிமறித்து தடுத்து நிறுத்திய அந்த இளைஞரை அந்தப் பெண் கடுமையாக திட்டியபடி மின்சார ரயில் ஏற நடைபாதைக்கு வந்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்தனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அந்தப் பெண், அங்கே நின்றிருந்த பயணிகள் கூட்டத்தில் வந்த போது, திடீரென அந்த  இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளம் பெண்ணிண் இடது பக்க தாடை மற்றும் இடது பக்க கையில் ஓங்கி வெட்டினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓட முயன்றார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர் இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி வெட்டினார். இதை நேரில் பார்த்த பயணிகள் சிதறி ஓடினர். இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

பயணிகள் அலறி ஓடுவதைப் பார்த்து அச்சமடைந்த அந்த நபர், தாம் பிடிபட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில், எதிரே வந்த மின்சார ரயில் முன்பு பாய்ந்து  தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் தண்டவாளத்தில் குதிக்கும் முன்பே ரயில் கடந்து சென்றதால் தலையில் காயம் பட்டு, நடைபாதையிலேயே விழுந்தார்.

இதில் அந்த நபருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டுப்பட்ட இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தப்  பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞரையும் ரயில்வே போலீசார் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டப்பட்ட பெண், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் தேன்மொழி(25) என்றும், பட்டப்படிப்பு முடிந்த அவர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா தியேட்டர் எதிரே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்- பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

தேன்மொழி,  எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அரிவாளால் வெட்டிய நபர் சுரேந்தர் (26) அந்தப் பெண்ணின் ஊரைச் சேர்ந்தவர். ஒரே ஊர் என்பதால் தேன்மொழியுடன் சுரேந்தர் நட்பு முறையில் பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் தேன்மொழி மீது சுரேந்தருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தேன்மொழியிடம் கூற அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.  இருப்பினும், தேன்மொழியின் வீட்டுக்கு இந்த விவகாரம் தெரிய வந்த போது,  தேன்மொழியை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மேலும், தேன்மொழியை சந்திக்க சுரேந்தர் அடிக்கடி அவர் பணி செய்யும் இடத்துக்கு வந்து தொந்தரவு கொடுத்ததால்,  தேன்மொழியுடன் வேலை செய்யும் ஊழியர்களும் சுரேந்தரை கண்டித்துள்ளனர்.

இதனால் தேன்மொழி சுரேந்தரை முற்றிலும் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார். சுரேந்தர் பல முறை போன் செய்தும் அவர் எடுக்காததால், தேன்மொழி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் சுரேந்தர்!

இரு தினங்களுக்கு முன்பும் தேன்மொழியை சுரேந்தர் சந்தித்தபோது, உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது; என்னை பார்க்க வராதே என்று தேன்மொழி கூறியதால்,  அவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார் சுரேந்தர். அதனால்தான் கையில் அரிவாளுடன் வந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டுக்கு அடுத்த ரயில் நிலையமான நுங்கம்பாக்கம் நிலையத்தில், இதே போல் இளம் பெண் சுவாதி, ஒருதலைக்காதல் விவகாரத்தில் ராம்குமார் என்பவரால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்ட சம்பவத்தின் சுவடுகள் இன்னும் மறையும் முன்பே, இது போல் இன்னுமொரு சம்பவம் நடந்திருக்கிறது.

Related articles

Recent articles

spot_img