மின்தடை காரணமாகவே நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்பட முடியவில்லை என்று அமைச்சர் ஓஎஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 563 நபர்களுக்கு ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை நாற்காலி, திருமண உதவித்தொகை, பள்ளிகளுக்கு செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அனைத்து இடங்களிலும் நிலவுவதாகவும், மின்தடை காரணமாக நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்பட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், முழுமையாக குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.




