ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்

chennai_press_clubசென்னை ஏப்.24 ஆம் தேதி சென்னையில் குண்டு வெடிக்கும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெயரில் மர்ம கடிதம் நேற்று வந்தது. சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள சென்னை பிரஸ் க்ளப் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேற்று மர்ம தபால் ஒன்று வந்தது. அதில் இருந்த கடிதம் சிவப்பு மையால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில்… சென்னையில் 50 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக்கொல்வோம். கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைப் போன்று சென்னையிலும் வரும் ஏப்ரல் 24–ந் தேதியன்று குண்டுகள் வெடிக்கும். – இப்படிக்கு, ஐ.எஸ். என்று எழுதப்பட்டிருந்தது. இதுபோன்ற கடித நகல் சட்டம்–ஒழுங்கு மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பத்திரிகையாளர் மன்றத்துக்கு அனுப்பினால்தான் அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு இந்த தகவல் போய் சேரும் என்பதால், இந்தக் கடிதத்தை பத்திரிகையாளர் மன்றத்துக்கு அனுப்பி உள்ளோம் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த மர்ம கடிதம் தொடர்பாக சென்னை நகர உளவுப்பிரிவு போலீசாரும், திருவல்லிக்கேணி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடிதம் எங்கிருந்து வந்துள்ளது என்பது பற்றியும் விசாரணை தீவிரமாக நடக்கிறது.