குளித்தலையில் மினிபஸ் ஓட்டுனர் அரசுபோக்குவரத்து பணிமனை கிளை மேலாளரை தாக்கியதால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் தனியார் மினி பேருந்து, அரசுப் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப் படுவதை, அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கார்த்திகேயன் தடுத்துக் கேட்டார். இதனால் மினி பஸ் ஓட்டுநர் கிளை மேலாளரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதை அடுத்து, அரசு பஸ் பணிமனை மேலாளரைத் தாக்கிய ஓட்டுநரை உடனடியாக கைதுசெய்ய கோரி அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டன.
குளித்தலை மற்றும் முசிறி கிளை அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார் ஆகியோர் பேச்சுவார்தையில் ஈடுபட்டு, மினி பேருந்துகள் இனி குளித்தலை பேருந்து நிலையத்திற்குள் வராது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
இதை அடுத்து அரசு ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிச் சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து தடைப்பட்டது.