
கொரோனா பேரிடர் காலமான தற்போது பல்வேறு துறைகள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள சூழலில் தங்குதடையின்றி செயல்பட்டு வரும் துறைகளில் ஒன்றான அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால்வளத்துறையில் ஆவின், தனியார் பால் நிறுவனங்கள் என்கிற பாகுபாடின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடின்றி கிடைக்கின்ற வகையில் சிறப்பான பங்களிப்பை பால் முகவர்கள் வழங்கி வருகின்றனர்.
கொரனா நோய் தொற்று ஒருபுறம் பயமுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு புறம் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக தனியார் நிறுவனங்களின் பாலினை விட தமிழக அரசின் ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போகின்ற நிலை தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. இதனால் பால் முகவர்கள் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
ஆவின் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே கெட்டுப் போவதற்கு ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கான செயல்பாடுகள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் பால் கொள்முதல் தொடங்கி, பாக்கெட்டில் அடைத்து விநியோகத்திற்கு கொண்டு செல்வது வரை ஆவின் நிர்வாகம் மெத்தனப் போக்கோடு தான் நடந்து வருகிறது. அதற்கு ஒருபானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பதை போல ஆவின் நிர்வாகம் எந்த அளவிற்கு நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்பதற்கு உதாரணமாக வேலூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் இருக்கிறது.
பொதுவாக பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அது சுகாதாரமான பால் டப்புகளில் அடுக்கி, குளிர்சாதன அறையில் குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்திற்கு இருப்பு வைக்கப்பட்டு அதன் பிறகு இன்சுலேட்டட் வாகனங்களில் ஏற்றி விநியோகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆவின் பால் பண்ணைகளில் பால் அடுக்கி விநியோகம் செய்யப்படும் டப்புகள் கடும் பற்றாக்குறையாக இருப்பதோடு, நிறைய டப்புகள் ஓட்டை ஒடிசல்களாக இருக்கின்றன. அதனால் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து குப்பைகளை அள்ளிச் செல்வது போல் ஆவின் பாலினை விநியோக வாகனங்களில் அள்ளி கொட்டி எடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி சில நேரங்களில் பால் பவுடர் மூட்டைகளின் காலி கோணிப் பைகளில் அள்ளிப் போட்டு கொண்டு வந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் ஆவின் பால் விரைவில் கெட்டுப் போய் விடுகிறது.
அதுமட்டுமின்றி ஆவின் பால் பண்ணைகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் உடனுக்குடன் பாக்கெட்டில் அடைத்து, அதனை குளிர்சாதன அறையில் இருப்பு வைக்காமல் அப்படியே ஏற்றி விநியோகத்திற்கு அனுப்புவதாலும் ஆவின் பால் விரைவில் கெட்டுப் போய் விடுகிறது. ஆனால் அவ்வாறு விரைவில் கெட்டுப் போகும் ஆவின் பாலிற்குப் பதிலாக புதிய பாலையோ அல்லது அதற்குரிய தொகையையோ இழப்பீடாக வழங்குவதில்லை.
எனவே தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணைகளில் தேவையான பால் டப்புகளை புதிதாக கொள்முதல் செய்யவும், உற்பத்தி செய்யப்படும் பாலினை சரியான குளிர் நிலையில் வைத்து பராமரித்து அதன் பிறகு இன்சுலேட்டட் வாகனங்கள் மூலம் மட்டுமே ஆவின் பாலினை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கெட்டுப் போகும் பாலிற்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஆவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
- சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.