இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:
சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பீப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து என்னிடம் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என தரக்குறைவாக பதில் கேள்வி கேட்ட இளையராஜா அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இசை மேதை, இசைஞானி என்றெல்லாம் போற்றக்கூடிய நீங்கள் ஒரு பொது தளத்தில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உங்கள் துறை சார்ந்த கேள்வியினை உங்களிடம் கேட்காமல் வேறு எவரிடம் கேட்பார்கள்? ஊரே பற்றி எரியும் போது ஒரு மன்னன் பிடில் வாசித்தாராம். அதைப் போல சிம்பு அனிருத் என்ற இரு அரைவேக்காட்டு ஆசாமிகள் செய்த தவறை சுட்டிக் காட்டி ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாத உங்களிடம் அந்த செய்தியாளர் கேள்வி கேட்டதில் என்ன தவறு?

“நாய் விற்ற பணம் குறைக்கவா போகிறது” எனும் அடிப்படையில் பணமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு இந்த சமூகத்தை சீரழித்ததில் உங்களுக்கும் பங்குண்டு என்பதால் தான் அப்படி கோபப்பட்டீர்களோ?

இந்த ஜனநாயக இந்தியாவில் கேள்வி கேட்பதற்கு கூட தகுதியை எதிர்பார்க்கும் நீங்கள் அவரை ஒரு சாதாரண மனிதனாகக் கூட பார்க்க மறந்து போனீர்களே அப்போது உங்கள் கண்களை மறைத்தது புகழ் எனும் போதையா? அல்லது பணம் எனும் மாயையா? ஒரு நிமிடம் நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.

தரமான பாடல்களை தந்த நீங்கள் தான் தரமற்ற, கேட்கவே காது கூசுகின்ற பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றிகரமான இசை வியாபாரியாக உலா வந்தீர்கள். அதனால் தான் இன்று சிம்பு, அனிருத் என்ற தருதலைகளுக்கு ஆதரவு தரும் விதமாக அமைதி காக்கிறீர்கள். ஒரு வேளை இன்று கிளம்பும் எதிர்ப்புகள் அப்போதே உங்களுக்கு எதிராகவும் கிளம்பியிருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்காது.

மக்கள் எப்போதும் நீங்கள் தருவதை அப்படியே அள்ளி மடியில் கட்டிக் கொள்ள மாட்டார்கள். அதனை திருப்பித் தரத் தொடங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

எனவே தங்களின் தரக்குறைவான அந்த செயலுக்கு பொது மேடையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.