கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:
தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள். அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானோர் பாடப் புத்தகங்களையும் நோட்டுகளையும் மழையால் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக புத்தகம் நோட்டு முதலானவைகளை அளிப்பதாக அறிவித்திருந்தது. இதுநாள் வரை முழுமையாக அம்மாணவர்களை அவை போய் சேரவில்லை. பள்ளி திறந்து ஒருவாரம் ஆன நிலையில் இதன் காரணமாக பாடங்கள் எதுவும் நடத்த இயலவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாத காலமாக விடுமுறையில் இருந்ததால் மாணவர்களிடைய கல்வி பயில்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கிற நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக மற்ற மாவட்ட மாணவர்களுக்கு இணையாக தேர்ச்சி பெற வைக்க முடியும்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவையற்ற வீணான விடுமுறையை திணிக்கிறது. வருகின்ற டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 3ம்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வம் குறைந்து எதிர்காலத்தில் இம்மாணவர்களின் வாழ்வில் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழர் பண்டிகையாம் பொங்கலின்போது தேர்வை அறிவித்திருக்கிறது. போகி பண்டிகையன்றும் காணும் பொங்கலுக்கு மறுநாளும் பொதுத் தேர்வு நடத்து இருக்கின்றனர். இதுவும் மாணவர்களின் ஆர்வத்தை பெரிதும் பாதிக்கும்.
பொங்கல் பண்டிகையின் இடையில் தேர்வை வைப்பதை தவிர்க்க இந்துமுன்னணி பள்ளிக் கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது.