காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்

சென்னை:

காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே மிகச் சிறந்த காவல் துறைகளின் ஒன்றான தமிழக காவல் துறைக்கு நவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்புக்கு மிக உயர் அதிர்வெண் அலைவரிசை (வி.எச்.எஃப்.) உள்பட வெவ்வேறு அலைவரிசைகளில் அலைக்கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர்ந்து எழுப்பப்படும் விவகாரம்: இவை மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறைகள் ஒவ்வொரு ரேடியோ செட்டுக்கும் உரிமக் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி வந்தன. ஆனால், 2004-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் காவல் துறைக்கும் அலைக்கற்றை கட்டணங்கள் விதிக்கப்பட்டன.

3 மடங்கு கட்டண உயர்வு: இந்தக் கட்டணத்தை, நிலுவைத் தொகை ரூ.73 கோடியுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரி வந்தது. இந்த நிலையில், அலைக்கற்றைக் கட்டணங்களை 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மூன்று மடங்காக மத்திய அரசு உயர்த்தியது.

இப்போது தமிழகத்துக்கு ஆண்டொன்றுக்கு அலைக்கற்றை கட்டணமாக ரூ.13 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து மாதத்துக்கு 2 சதவீதத்தை தாமதக் கட்டணமாக விதிக்கப்படுகிறது.

இந்த நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரையில் போலீஸாருக்கான வயர்லெஸ் கருவிகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மொத்தமாக ரூ.140 கோடியை காவல் துறை செலுத்த வேண்டும் என மத்திய அரசின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவிடமிருந்து 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-இல் கடிதம் வந்துள்ளது.

இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக உள்துறைச் செயலர் 4.9.2014-இல் கடிதம் எழுதினார்.

காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது கடினம்.

கட்டணம் விதிப்பது நியாயமல்ல!

சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், தேசியப் பேரிடர் காலங்களிலும்தான் போலீஸ் ரேடியோ நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான அலைவரிசைக் கட்டணம் இந்தத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நவீனமயமாக்கலில் முதலீடு செய்வதைத் தடுக்கும்.

நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பணியில் உள்ள காவல் துறைக்கு, கட்டணம் விதிப்பது நியாயமானதல்ல.

கட்டண விதிப்பு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான நடவடிக்கையாகும். எனவே, மாநிலக் காவல் துறைகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதோடு, தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூ.140 கோடி அலைக்கற்றைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.