ஏ.பி. பரதன் மறைவு: ராமதாஸ், ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,

பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஏ.பி.பரதன் அவர்கள் உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன்.
இப்போதைய வங்கதேசத்தில் உள்ள ஷிலெட் கிராமத்தில் பிறந்த பரதன் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 75 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 4.5 ஆண்டு காலம் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் இருந்த பரதன் அடித்தட்டு மக்களுக்காகவே தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தார். ரயில்வே தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காக போராடி ஏராளமான உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்.

பரதனின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுவுடைமைத் தோழர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.