சென்னை:
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் இறகு பந்தாட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை பி.வி. சிந்து சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. அவருக்கு தமிழ்நாடு இறகு பந்தாட்ட சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒலிம்பிக் இறகு பந்தாட்டத்தில் சிந்து தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நோக்குடன் சிந்து தொடக்கம் முதலே கடுமையாக போராடினார். உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கரோலின் மரினை இந்தளவு போராட வைத்ததே சிந்துவின் சாதனை தான். அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றியை விட போராட்டத்திற்கு பின் கிடைத்த தோல்வி பெருமையானது. அந்த பெருமை சிந்துவுக்கு கிடைத்துள்ளது.
இறகு பந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெருங்கனவு என்பது அனைத்து இங்கிலாந்து ஓபன் இறகு பந்தாட்ட சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வதாகவே இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளி வென்றிருப்பது சாதாரண சாதனையல்ல மாறாக இமாலய சாதனை. இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; எத்தனை பூங்கொத்து, வெகுமதிகள் வழங்கினாலும் அவை போதாதவையாகவே இருக்கும்.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய போது இந்தியா ஏராளமான பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் தோல்விகளே பரிசாக கிடைத்ததால் இந்திய ரசிகர்களின் இதயங்களில் ஏமாற்றமே குடியேறியது. இரசிகர்களின் இதயங்களே ஏமாற்றத்தில் துவண்ட போது, தனது சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் தம்மை அண்ட விடாமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது போற்றத்தக்க சாதனையாகும்.
இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்றாகிவிட்ட சூழலில் இறகுபந்தாட்டத்தில் உலக அளவில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் சாதனை படைத்து வருவது இந்த ஆட்டத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது. வீராங்கனை சிந்துவும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துவும் தான் இதற்குக் காரணம் ஆகும். கோபிசந்த் மட்டும் இல்லாவிட்டால் சாய்னா நேவால்களும், சிந்துக்களும் உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்களா? என்பதே சந்தேகம் தான். இனிவரும் காலங்களில் இந்தியாவிலிருந்து உலகத்தரம் வாய்ந்த இறகு பந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாவதற்கு சிந்துவின் இந்த சாதனை வெற்றியும், கோபிசந்தின் அயராத உழைப்பு மற்றும் பயிற்சியும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிந்து இளம் வீராங்கனை. இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரால் இறகு பந்து போட்டிகளில் விளையாட முடியும். இந்த போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, அடுத்த ஒலிம்பிக்போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்; அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
பி.வி.சிந்துவுக்கு ராமதாஸ் பாராட்டு
Popular Categories



