கொரோனா வைரஸ் காரணமாக என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தமது வீட்டின் முன்பு போர்டு மாட்டி வைத்துள்ளார்.
உலக நாடுகளில் பரவலாக பரவி விட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும், நாடெங்கும் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பதால், பல்வேறு இடங்களும் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில், யாரும், யாரையும் சந்திக்க வேண்டாம், முகக்கவசம் போட்டு கொள்ளுங்கள் கைகூப்பி வணக்கம் வையுங்கள் அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று அரசு மக்களுக்கு விழிப்பு உணர்வினை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது வீட்டின் கேட்டில் ஒரு போர்டும் மாட்டி வைத்துள்ளார். அதில், வரும் 31ஆம் தேதி வரை என்னை யாரும் வந்து சந்திக்க வேண்டாம். சென்னை இல்லம், கோபிசெட்டி பாளையம் இல்லம் ஆகிய 2 இல்லங்களுக்கும் யாரும் என்னைத் தேடி வர வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து, அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வருபவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.