
கோவையில் கோவில் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச்சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப் பட்டுக் கிடக்கின்றன. கோயிலில் பூஜை செய்பவர்கள் முக்கிய பணியாளர்கள் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து வருகின்றனர்.
எனினும், பக்தர்களின் வழிபாட்டுக்காக, கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்று இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி அமைப்பினர் இரு தினங்களுக்கு முன்னர் கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போட்டு பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து, ஆலயங்களைத் திறந்து விடக் கோரினர்.
இந்நிலையில், கோவையில் ஒரு கோவிலின் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச்சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை டவுன்ஹாலை அடுத்த சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோவிலும், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டுள்ள சூழலில், இன்று காலை கோவில் கதவின் முன்பு இறைச்சியை ‘மர்ம நபர்கள்’ இருவர் வீசிச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.
இன்று காலை கோவில் முன்பு வந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த இருவர் இவ்வாறு வீசிச் சென்றுள்ளதாக பூக்கள் கட்டி விற்கும் பெண்மணி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா குறித்து விசாரிக்கப் பட்டதில், இந்தக் கோவிலில் சிசிடிவி கேமரா இல்லை என்றும், கோயில் கோபுரத்தை அடுத்த ராகவேந்திரர் கோயில் பிருந்தாவனத்தில் கேமரா உள்ளது என்றும் ஆயினும் அந்தக் கேமரா செயல்பாட்டில் இல்லை என்றும் அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

எனினும் அருகில் உள்ள அபார்ட்மெண்ட்களில் கேமராக்கள் நிறுவப் பட்டிருப்பதால், பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரியவரும் என்று சொல் கிறார்கள்.