திண்டுக்கல்:பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோட்டை சேர்ந்தவர் சசி(62). நேற்று மதியம் அவரது மனைவி விஜியம்மா(60), பேரன்கள் அபிஜித்(17), ஆதித்யன்(12), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(62), அவரது மனைவி லேகா(50), மகன் மனு(27), பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு மனைவி சஜினி(52) ஆகியோருடன் பழனிக்கு மாருதி வேனில் வந்துள்ளார். வேனை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார்.
திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி அருகே இரவு 12.30மணியளவில் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாரா விதமாக எதிர் திசையில் பழனியில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைக்கு பழைய இரும்பு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இது குறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீஸார் டிஎஸ்பி., முத்துராஜன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். லாரியுடன் வேன் சிக்கியதால் பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேனை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்தில் வேனில் பயணம் செய்த சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேனில் இறந்தவர்கள் உடல் கிரேனை கொண்டு வேனை பிரித்த பின்னரே எடுக்க முடிந்தது. பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அபிஜித் வழியிலேயே உயிரிழந்தார்.
மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட விஜியம்மா திண்டுக்கலில் விஜியம்மா உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆதித்யன், சஜினி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறி்த்து லாரியை ஓட்டி வந்த பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ஓட்டுனர் அய்யப்பன் மீது சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.