மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் பேரவைத் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
டீன் ரெத்தினவேலு, கரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று பதிவிட்டுள்ளார் .
இந்த நிலையில் சமஸ்கிருத உறுதிமொழியை மொழிப்பெயர்த்து படித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், பொதுச் செயலாளர் வேணுகோபால் துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30 ஆம் தேதியன்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. அது தவறானது. சமஸ்கிருத மொழியில் இருந்த உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை. சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் நாங்கள் படித்தோம் என்றனர்.







