
விருதுநகரில் வளர்ப்பு நாய்களை இரு தரப்பினர் வாக்கிங் கூட்டிச் சென்ற போது, ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அடி உதை விழுந்தது. 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் குப்பையா சந்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(42). இவரது வீட்டில் வேலை செய்து வருபவர் சேகர். இருவரும் வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டிச் சென்றுள்ளனர். சிவன்கோவில் தெற்கு புறம் உள்ள பெட்டிக் கடை அருகே சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பாலகிருஷ்ணன், அழகேந்திரன், கண்ணன் ஆகியோர் மற்றொரு நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளனர். அப்போது, அசோக்குமாரின் நாய், அந்த நாயைப் பார்த்து குரைத்து கடிக்க வந்ததாம்.
எனவே, அசோக்குமார் அந்த நாயை விரட்டுவதற்காக கல்லை எடுத்தாராம். அதைப் பார்த்த சிவசங்கர் உள்ளிட்டோர், அசோக்குமாரை திட்டியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்நிலையில், 4 பேரும் சேர்ந்து அசோக்குமார் மற்றும் சேகரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





