
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போவதாயிருந்தால், இந்தத் தகவல் உங்களுக்காகத்தான். செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) திங்கட் கிழமை நாளை (ஏப்.28) விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் இயங்கும். வழக்கமாகச் செல்லும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் செல்லாது.
அதற்கு பதிலாக, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் வழக்கம்போல் மயிலாடுதுறைக்குச் செல்லும். இதனை, திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.





