தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் திறந்து வைத்தார் .
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஒரு பழைமையான பூங்கா பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் முட்புதர்களாக நிறைந்து இருந்தது. சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வந்தது.
இதனை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று செங்கோட்டை காவல்துறை சார்பாக முடிவெடுக்கப்பட்டு காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பூங்காவினை சீரமைத்து அதன் சுற்றுச் சுவர் முழுவதும் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து அழகு படுத்தினர் .
இதன் திறப்பு விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் .
பூங்கா சுவர்களில் ஓவியங்கள் வரைந்த சிறுவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் வழங்கினார்.