
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், ஆடித்திருவிழாவில் நடைபெறும் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்தாண்டிற்கான ஆடித்திருவிழா முன்னிட்டு கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து ஓவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீப்ரத்யங்கீரா,ருத்ர யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாணவேடிக்கை மற்றும் மேளத்தாளம் முழங்க கணேசன் சாமிகள் தலைமையில் பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தாங்களது நேத்திக்கடனை செலுத்தினர்.
இதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



