
மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் தெரிவித்தபோது…
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனலட்சுமி என்ற 65 வயதுடைய மூதாட்டி சாலையில் சுற்றித் திரிந்தார். அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து போது பனையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தனலட்சுமி என்பது தெரிய வந்தது.
அந்த மூதாட்டியை பிள்ளைகள் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதும் தெரியவந்தது . நீடூரில் மேற்படி தனலட்சுமியின் சகோதரி மற்றும் பிள்ளைகளை தொடர்புகொண்டு மூதாட்டி தனலட்சுமியை நல்லமுறையில் மூதாட்டியின் உறவினர்களிடம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி ஒப்படைத்தார்.
இந்த மனிதநேய செயலில் தனலட்சுமி மற்றும் அஸ்வினி ஆகிய இரு பெண் காவலர்களும் ஈடுபட்டனர். சாலையில் சுற்றித் திரிந்த மூதாட்டியை பத்திரமாக உறவினர்களிடம் ஒப்படைத்த பெண் காவல் ஆய்வாளர் மற்றும் இரு பெண் காவலர்களையும் மயிலாடுதுறை பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.
பெண் காவலர்களின் இந்த மனிதநேய செயலை மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனதார பாராட்டுகிறது. மேலும் காவலர்களை நல்ல முறையில் வழி காட்டிக் கொண்டிருக்க கூடிய தஞ்சை சரக காவல் துணை தலைவர் டாக்டர் லோகநாதன், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோருக்கும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறது என்றார்.