மக்களின் குறைகளை கேட்க தனி செல்போன் செயலி விரைவில் துவங்க உள்ளதாகவும், பண்டிகை காலத்தில் கொரனோ தொற்று பரவல் விசயத்தில் வணிகர்களும், பொதுமக்களும் அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மலர்விழி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக மலர்விழி கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூட்டரங்கில் சந்தித்தார்.
அப்போது பேசிய ஆட்சியர், இன்னும் 6 மாத காலத்திற்குள் கரூர் மாவட்டத்தில் வீடு இல்லாமல், குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்கப்படும். தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓய்வூதியம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் இருக்கவும், வரும் பருவமழை காலங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தினசரி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் பணியை எளிமையாக்க, பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிமையாகத் தெரிவிக்க வசதியாக ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம், அதே போன்று கரூர் மாவட்டத்திலும் ஒரு வார காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தப்படும்… என்றார்.
டிஜிட்டல் பேனர் வைப்பதை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதில் நடைமுறைப் படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை கண்டறிந்து மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். எந்த கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கொரோனோ தொற்று பரவல் தடுக்கும் விதமாக அரசு விதிகளை பொதுமக்கள், வணிகர்கள் கடை பிடிக்க வேண்டும், பண்டிகை காலங்களில் கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், வணிகர்களும் அரசு விதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும், கடைகளை சீல் வைக்கும் நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தை தள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.