அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடந்து வருகிறது. கட்சியில் ஒற்றைத் தலைமையை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமியின் புதிய சமரச திட்டத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இதன் காரணமாக, இரு அணியினரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதில், நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சம்பந்தம் இல்லாமல் திடீரென அதிமுகவை வழிநடத்தி செல்ல ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கினர். கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தி பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் திடீரென ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதால், அதிமுகவில் கடந்த 4 நாட்களாக ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டு பேருக்கும் ஆதரவாக போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது. இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்கள் கடந்த 3 நாட்களாக ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால், ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். அதிமுக கட்சியை பிளவுபடுத்த எடப்பாடி அணியினர் சதி செய்வதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆதரவாளர்கள் பலரும் சந்தித்து பேசினர்.
இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மதியம் திடீரென சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சில மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். ஓபிஎஸ், வருகிறார் என்று கேள்விப்பட்டதும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்று அவர்களிடம் கேட்டு, அந்த தீர்மானங்களை வாங்கி படித்து பார்த்தார். அதில், ஓபிஎஸ் கையெழுத்திட்டார். மேலும், இந்த தீர்மானங்களை தவிர புதிதாக வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, ‘‘ஜெயலலிதா 30 ஆண்டுகளாக அதிமுக பொதுச்செயலாளராக இருந்தார். அவர், இருந்தபோது நிரந்தர பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைந்தாலும், அவரை மதிக்கும் வகையில் அதிமுக கட்சி இருக்கும் வரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று பொதுக்குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்பட்டது. புதிதாக பொதுச்செயலாளர் பதவி என்றால், ஜெயலலிதாவை அவமதிப்பது போல் ஆகிவிடும்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், எனக்கே தெரியாமல் திடீரென அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இது ஒரு சிலரால் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். கட்சி கூட்டத்தில் நடந்ததை யாரும் வெளியில் தெரிவிக்க கூடாது என்ற நிலையில், ஜெயக்குமார் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்பிறகுதான் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
பொதுச்செயலாளர் பதவி என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது இப்போது தேவை இல்லை. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானம் கொண்டு வர முடியாது. தற்போதுள்ள நடைமுறையே (இரட்டை தலைமை) தொடர வேண்டும் என்று கூறினார்.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு, ஓபிஎஸ் வெளிப்படையாகவே நேற்று முன்தினம் தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார். இதனால் எடப்பாடி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதையும் மீறி ஒற்றைத் தலைமை பிரச்னையை பொதுக்குழுவில் கிளப்பினால், அதிமுக இரண்டாக உடையும். சின்னம், கொடி முடக்கப்படும் ஆபத்து உள்ளதாக எடப்பாடி அணியினர் யோசிக்க தொடங்கியுள்ளனர். இதனால், ஒற்றைத் தலைமை பிரச்னையை சுமுகமாக பேசி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், எடப்பாடி அணியினர் புதிய சமரச திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். இதுபற்றி நேற்று முன்தினம் சேலத்தில் தன்னை சந்திக்க வந்த மாநிலங்களவை எம்பி தம்பிதுரையிடம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இந்த சமரச திட்டத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, தம்பிதுரை நேற்று மதியம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நேரடியாக ஆலோசனை நடத்தினார். அப்போது வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், சுப்புரத்தினம் ஆகியோரும் உடனிருந்தனர். அதன்படி, பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் அதிமுகவில் புதிதாக தலைவர் பதவியை உருவாக்கலாம்.
அதே நேரம் ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிக்கும். தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வமே நீடிக்க வேண்டும். மேலும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சியின் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளரின் ஆலோசனையின்படி செயல்படுவார்கள். கட்சியின் சார்பில் அறிவிப்பு மற்றும் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட பொறுப்பு தலைவரிடம் இருக்கும். தலைவருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கும் என்ற புதிய சமரச திட்டம் வகுப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தையும் ஓபிஎஸ் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைெதாடர்ந்து நேற்று கே.கே.நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரன் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
அதேநேரம், ஒற்றைத் தலைமை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் பொதுக்குழுவிலேயே சட்டம் -ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி ஏற்பட்டால் இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருவருமே தனக்குத்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அதிகம் என்று தெரிவிப்பார்கள்.
இருவரும் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடருவார்கள். அப்போது கட்சி, சின்னம் முடக்க வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளதால் கட்சி, சின்னம் முடக்கப்பட்டாலும், 2 ஆண்டில் சட்டப் போராட்டம் நடத்தி கட்சியை மீட்க முடியுமா அல்லது பேசாமல் ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை கைவிடலாமா என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்க கூடாது என 2ம் கட்ட தலைவர்கள் தூண்டி வருவதால் இரு அணிகளிலும் தீவிர ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டு, 4 நாள் ஆகியும் தலைவர்களுக்கிடையே முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில், தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை முறியடிப்பதா அல்லது தனி பொதுக்குழுவை கூட்டுவதா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.





