மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் 20-வது முதல்வராக பதவியேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. ஆட்டோ ட்ரைவராக இருந்து தன் பொதுவாழ்வை தொடங்கிய இவர்,மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.
மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிறுவயதில், மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்துள்ளனர். வறுமையினால் பதினோராம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஏக்நாத் ஷிண்டே, தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்துள்ளார். வருமான ரீதியாக குடும்பத்துக்கு உதவ வேண்டும் என நினைத்து மும்பையின் `தானே’ பகுதிக்கு சென்று அங்கு ஆட்டோ ஓட்டி குடும்ப பாரத்தை சுமந்திருக்கிறார்.
ஆட்டோ டிரைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு, 1980களில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் கொள்கைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அவரின் கொள்கை சார்ந்து தேடுகையில், அப்போதைய `தானே’ மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவின் தொடர்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் சிவசேனாவில் சேர்ந்துள்ளார். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் அவர் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.
1980-களிலிருந்தே சிவசானேவில் செயல்பட்டு வந்த ஏக்நாத் ஷிண்டே, கட்சியில் தனக்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறுதிசெய்து, 1997 ஆம் ஆண்டில் முதல் முதலாக, தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். பின், 2004 ஆம் ஆண்டு, தானேவில் உள்ள கோப்ரி – பக்பகாடி தொகுதி எம்.எல்.ஏ., ஆனார் அவர். அதைத்தொடர்ந்து 2009, 2014. 2019-ம் ஆண்டுகளிலும் அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இதற்கிடையே 2014-ல், சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார் ஷிண்டே. இந்த காலகட்டத்தில், அமைச்சராகவும் அவரை பணியமர்த்தியது சிவசேனா. 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
இந்த இடத்தில், 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது சிவசேனாவில் நடந்த சில தேர்தல் குளறுபடிகள் – கூட்டணி பிரச்னைகள் – உத்தவ் தாக்ரே முதல்வரானது குறித்து நாம் காண வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அந்நிகழ்வுகளே இன்று ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தலா 105 – 56 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்க தகுதி பெற்றிருந்தது. இதற்கு முந்தைய காலகட்டமான 2014-19 காலகட்டத்திலும் பாஜக – சிவசேனாதான் ஆட்சியமைத்திருந்தது. அப்போது பாஜகவின் வேட்பாளர்தான் முதல்வராகியிருந்தார். ஆகவே 2019-ல், `பாஜகதான் அதிக இடங்கள் பிடித்திருந்தது என்றாலும்கூட சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும்’ எனக்கூறி முதலமைச்சர் பதவியை தங்களுக்கு தர சிவசேனா வலியுறுத்தியது. அதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக, உறுதியாக சிவசேனாவின் கோரிக்கையை மறுத்தது.
இந்தச் சூழலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவர் எடுத்த முயற்சியால், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தன. அப்போது முதலமைச்சராக, உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
இப்படி முதல்வராக உத்தவ் தாக்கரே, சுமார் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை தொடர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். தனக்கு சாதகமாக, பாஜக கூட்டணியிலிருந்து உத்தவ் தாக்கரே பிரிந்தது தொடர்பாக அதிருப்தியில் இருந்த சில சிவசேன எம்.எல்.ஏ.க்களையும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினார் ஏக்நாத் ஷிண்டே. இதனால் பேரவையில் பெரும்பான்மையை அதிகாரபூர்வமாக இழந்தார் உத்தவ் தாக்கரே.
ஏக்நாத் ஷிண்டேவின் இந்த அதிருப்தியாவும், திடீரென உருவானதில்லை என்று சொல்லப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே உத்தவ் தாக்ரேவின் நடவடிக்கைகளில் அவருக்கு அதிருப்தி இருந்ததாகவும், அதனால் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாகக் கட்சி நிர்வாகிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்து கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. உடல்நலப் பிரச்னைகள் காரணமாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்துள்ளார் உத்தவ் தாக்கரே. அந்த இடைவெளியைப் பயன்படுத்தியே ஏக்நாத் ஷிண்டே இந்தளவுக்கு பெரும்பான்மைக்கான வேலைகளை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டணியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டேவுக்கும் அதில் உடன்பாடு இருந்ததால், மேற்கொண்டு அவர் பாஜகவுடன் மேற்கொண்டார். அதிலும் சுமூகமான முடிவு ஏற்பட்டது. இருப்பினும் இம்முறை ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் முன்வந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும் விட்டுத்தர முன்வரவில்லை. ஒருகட்டத்தில் இருவருமே அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியிடம் தாங்கள் முதல்வராக வேண்டும் என உரிமை கோரினர். இருப்பினும் இருவரில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பட்னாவிஸ், துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இப்படியாக ஆட்டோ டிரைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி இன்று நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
தனது இந்த முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கூறும்போது, “பாஜகவிடம் அதிக எம்எல்ஏக்கள் உள்ள போதிலும், அவர்கள் முதல்வராக எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர். பட்னாவிஸ் பரந்தமனம் கொண்டவர் என்பதையே இது காட்டுகிறது. இதற்காக அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கும் நன்றி. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைத்ததை கட்சி எம்எல்ஏக்கள் ஏற்கவில்லை.
மேலும் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிராக கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சி இருந்தது. அதனாலேயே இந்துத்துவாவை காப்பாற்ற துணிந்து இந்த முடிவை நாங்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) எடுத்தோம். புதிய ஆட்சியில் பால் தாக்கரேவின் கொள்கைகளை அமல் செய்வோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.
இதே கருத்தை குறிப்பிட்டு, பட்னாவிஸூம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “2019இல் மகாராஷ்டிர மக்கள் பாரதிய ஜனதாவின் ஆட்சியையே விரும்பினர் என்றும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தல் முடிவுக்கு பின் மீறிவிட்டார். உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் பால் தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிரானதாக, சாவர்க்கரையும் இந்துத்துவத்தையும் அவமதிப்பது போல இருந்தது, சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி” என குறிப்பிட்டிருந்தார்.