கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்த அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக அணி திரண்டு செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு அதனை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை கேட்டு கோர்ட்டு படியேறினர். எப்படியாவது சட்டத்தின் மூலமாக தடை வாங்கி விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயலாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியினர் ஆதரவு இல்லாத நிலையில் தவித்து வந்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவாகவே அமைந்துள்ளது. கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் முதல் முதலாக ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியை பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆவேசம் பொங்க பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இரட்டை தலைமை தற்போது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒற்றை தலைமைக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதன் பின்னர் அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சோதனை மேல் சோதனையாக அமைந்திருந்தன. குறிப்பாக கடந்த ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தனக்கு எதிராக இவ்வளவு களேபரம் நடந்தேறும் என்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவருக்கு எதிர்ப்பலைகள் எழுந்தன.
இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்கள் கிழித்தும் எறியப்பட்டன. இப்படி கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் கடைசியில் அதுவும் பலிக்காமலேயே போய் விட்டது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை 100 சதவீதம் ஓங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக ஓபிஎஸ் வழக்கறிஞர் கூறினார். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் செய்தார். சென்னை அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருக்கிறது, அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது, என்றார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அப்போது, 11ம் தேதி கூட்டத்தைக் கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கியிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதன் கிழமை பிறப்பித்த உத்தரவின் நகல்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்துள்ளார்.இன்று மாலை என்ன நடக்கும் அரசியலாளர்கள் காத்திருக்கின்றனர்.