
— முரளி சீதாராமன்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் தெரிவித்து உள்ள கருத்து அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு விவாதமாகியுள்ளது.
‘ஆன்லைன்’ விளையாட்டு தொடர்பான சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் 4 மாதங்கள் 11 நாட்கள் கழித்து மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த மசோதா குறித்து ஆளுநர் ரவி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு முகாந்திரம் இல்லை.சட்டப்படி இந்த மசோதா எப்படி சாத்தியமாகும்? மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இவ்விவகாரம் வருகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொதுவாக, ஆன்லைன் ரம்மியை நாம் ஆதரிக்கவில்லைதான். எந்த ஒரு சூதாட்டத்தையும் அறிவார்ந்தவர்கள், தர்மம் அறிந்தவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். இந்த ஆன்லைன் ரம்மியை விளையாடும் உத்தேசமும் நமக்கு இல்லை! சொல்லப் போனால் “பந்தயமாக” BET கட்டி ஆடும் எந்த விளையாட்டிலும் ஈடுபடும் எண்ணமில்லை. ஆனால் இந்த ஆன்லைன் ரம்மி பற்றிய விவாதம் -இதற்கு இன்னொரு பக்கம் உண்டு.
ரம்மி எனப்படும் சீட்டாட்டம் எத்தனையோ பெருநகரங்கள் / நகரங்களில் காஸ்மோபாலிடன் க்ளப்களில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெரும் பணக்காரர்களால் ஆடப்படுவதுதான். இது ஒன்றும் புதிதல்ல – அது அசல் சீட்டாட்டம் – இது ஆன்லைன் அவ்வளவுதான் வித்தியாசம். இதில் யாரும் உங்களை ஆடித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை.
ஒரு நாளுக்கு / ஒரு வாரத்துக்கு இத்தனை ரூபாய்தான் – அதற்கு மேல் ஆடுவதில்லை – என்ற கட்டுப்பாடு வைத்துக் கொண்டு ஆடினாலும் ஆடலாம். குறிப்பிட்ட தொகை “லாபம்” வந்தவுடன் விலகிக் கொண்டாலும் கொள்ளலாம் – அல்லது இவ்வளவுதான் எனது லிமிட் என்று குறிப்பிட்ட தொகை “இழப்பு” ஏற்பட்டவுடன் வெளியேறினாலும் வெளியேறிவிடலாம். ஆனால் விட்டதைப் பிடிக்கிறேன் – விட்டதைப் பிடிக்கிறேன் என்று ஆடி மொத்தமும் இழப்பது – அவரவர் மன பலவீனத்தைப் பொருத்தது.
அப்படிப் பார்த்தால் – “ஷேர் மார்க்கெட்”- கூட சூதாட்டம்தான். அதிலும் கட்டுப்பாட்டுடன் புகுந்து விளையாடுவோர் உண்டு. காலையில் பங்குச் சந்தை திறந்தவுடன் கம்ப்யூட்டரை வீட்டிலோ – ப்ரவுசிங் சென்டரிலோ போய் திறக்கிறார்கள். இன்னின்ன கம்பெனி பங்குகள் ஏறுமுகமாக உள்ளன – வாங்கிப் போடு – அடுத்தமாதம் விற்கலாம் – இன்னின்ன கம்பெனி பங்குகள் சரியக் கூடிய அடையாளங்கள் (TREND) தென்படுகிறது – போனமாதம் வாங்கிய விலையை விட இப்போது சற்றே கூடுதல் – ஆனால் இறங்க வாய்ப்பு உண்டு – விற்றுவிடு… PRUDENT DECISION மூலம் பங்குகளை வாங்கி – விற்று – வாங்கி – விற்று… இன்று சந்தை க்ளோஸ் பண்ணும் போது நிகர லாபம் …… ரூபாய்! அல்லது நஷ்டம்…… ரூபாய்! போதும் இதற்கு மேல் ஆட மாட்டேன்!
அவர்கள் தங்கள் சம்பளம் / பென்ஷனில் இருந்து – “இவ்வளவு தொகைதான்”- என்று EARMARK செய்துவிட்டு – அதற்கு மேல் ஆடுவதில்லை என்று தங்களுக்குத் தாங்களே லிமிட் வைத்து ஆடுபவர்களும் உண்டு! அதே பங்குச் சந்தையில் விட்டதைப் பிடிக்கிறேன் என்றோ அல்லது மேலும் மேலும் என்ற பேராசையிலோ வீடு – நகை எல்லாம் விட்டவர்களும் உண்டு! அதற்காக பங்கு மார்க்கெட்டை மூட முடியுமா?
அரசாங்கமே லாட்டரி சீட்டு நடத்தியதே! அதை தமிழகத்தில் அறிமுகப் படுத்தியதே அண்ணாதுரை தானே! (“பரிசு விழுந்தால் வீட்டுக்கு – விழாவிட்டால் நாட்டுக்கு!”- அண்ணா) அதிலும் கணக்காக மாதம் 10 ரூபாயோ 20 ரூபாயோ – அதற்கு மேல் லாட்டரி டிக்கெட் வாங்க மாட்டேன் என்று திடமாக நின்றோரும் உண்டு! வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் லாட்டரி சீட்டு வாங்கியே ஒழித்தவர்களும் உண்டு.
எனவே பந்தயம் வைத்து ஆடும் எந்த ஆட்டமும் சூதாட்டமே.
நேரடி உழைப்பு – உழைப்பினால் உற்பத்தி – அதனால் வருமானம் – இப்படி ஒரு நேர்கோட்டில் அமையாமல்… இதைத் தவிர – ஒரு “ரிஸ்க்” அம்சத்தை உள்ளீடாக வைத்து SPECULATIVE ஆக நடைபெறும் எதுவுமே சூதாட்டம்தான் – ரியல் எஸ்டேட் உட்பட!
எவரும் உன்னை நிலத்தை வாங்கு என்று வற்புறுத்தவில்லை – இந்த நேரத்தில் விற்றுவிடு என்றும் எவரும் உன்னை வற்புறுத்தவில்லை – நீங்களாக வாங்கினீர்கள் – விற்றீர்கள் – நீங்கள் விற்ற பிறகு சில காலத்தில் நிலம் விலை அங்கே பன்மடங்கு ஏறியது – அடடா காத்திருந்து விற்றிருக்கலாமே என்பது உங்கள் கவலை – மற்றவர்களுக்கு என்ன பொறுப்பு அதில்? எனவே எவரும் உங்களை ஈடுபட வலியுறுத்தவில்லை – எப்போது வேண்டுமானாலும் வந்தவரை லாபம் / அடைந்தவரை இழப்பு போதும் என்று வெளியேறும் சுதந்திரம் உங்களிடம்!
இப்படி உள்ள ஒரு பந்தயத்தையோ, ஊக வணிகத்தையோ எப்படி சட்டரீதியாகத் தடை செய்ய முடியும்? “டாஸ்மாக்”கால் குடித்து சீரழிபவர்களின் எண்ணிக்கை – ஆன்லைன் ரம்மியில் நஷ்டம் அடைந்து – அதனால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை விட பலப்பல ஆயிரம் மடங்கு அதிகம்! அதற்கு என்ன நடவடிக்கையை இந்த அரசு எடுக்கப் போகிறது?!