தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செய்தி குறித்து ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். தகுதியான பெண்களுக்கு ரூ ஆயிரம் என கூறி தி.மு.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது என பாஜக குஷ்பு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரும் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
வாய் ஜாலத்தில் தி.மு.க.வினர் கில்லாடிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. எப்போதுமே தி.மு.க.வின் பேச்சு ஒரு மாதிரி இருக்கும். செயல் வேறு மாதிரி இருக்கும். அதே போலத்தான் தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 60 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80 லட்சம் பேரை தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்க இருக்கிறார்களாம். அப்படியானால் 2½ கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
எந்த தகுதியின் அடிப்படையில் பெண்களை பிரித்தீர்கள்? தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி இந்த பெண்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். வறுமை கோட்டை தாண்டி விட்டார்களா? வசதியான வாழ்க்கை வாழுகிறார்களா? எதை அடிப்படையாக வைத்து தகுதியை நிர்ணயித்தீர்கள்? தேர்தல் நேரத்தில் இதை நேரடியாக சொல்லி இருக்கலாமே.
சொன்னால் வாக்கு விழாது என்ற பயம். அதனால் தான் பொய்யான வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி பேசி ஏமாற்றி இருக்கிறது. ஒரு அரசு என்பது எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த விசயத்திலும் காட்டி உள்ளது. இதற்கு பெண்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.