பாமக.,தான் இல்லை..! தேமுதிக.,வாவது வருமா? வந்தால் வெளியேறப் போவது யார்? வி.சி.,யா மதிமுக.,வா?

பாமக., வுக்காக காத்திருந்து, எதிர்பார்த்திருந்து, அது கைகூடாத நிலையில், மீதம் இருக்கும் ஒரு கட்சியான தேமுதிக.,வையாவது கூட்டணிக்குள் இழுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது திமுக., தரப்பு. அதன் ஒரு பகுதியாகத்தான், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரே நேரில் சென்று விஜயகாந்த்தைப் பார்த்து நலம் விசாரித்து கூட்டணி குறித்தும் பேசிவிட்டு வந்துள்ளார். திருநாவுக்கரசரின் க்ரீன் சிக்னலை அடுத்து, கூட்டணிச் சிக்கலை தீர்க்கும் வேலையில் திமுக., தரப்பு இறங்கியிருக்கிறது.

இன்று காலை திடீரென ஒரு திருப்பமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் என்றார்.

திருநாவுக்கரசர் மேலும் தெரிவித்த போது, விஜயகாந்த் நலமுடன் உள்ளார், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாட்டு நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன் என்று கூறினார்.

அவரிடம் அரசியல் பேசினீர்களா, கூட்டணி குறித்து ஏதும் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,  தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம். நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று கூறினார்.

எனவே, விஜயகாந்த் திமுக., பக்கம் சாயத் தயாராகிவிட்டார் என்ற செய்தியை வெளியுலகுக்குத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுடன், அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர் அக்குழுவினர்.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு பத்து தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 30 தொகுதிகளில் தோழமை கட்சிகளுக்கு கௌரவமான அளவில் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்  படுகிறது.

திமுக.,வின் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக., மற்றும் பழைய கூட்டணிக் கட்சிகளான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டிய நிலையில் திமுக., உள்ளது. இது குறித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விஜயகாந்த்தை திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் ஸ்டாலினுடன் இந்த  ஆலோசனை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்த்தை திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இருப்பினும், ஒரு முடிவு எட்ட முடியாமல் பேச்சு நீண்டு கொண்டே உள்ளது.

காரணம், தேமுதிக.,வுக்கு அதிமுக., கூட்டணியில் அக்கட்சி கேட்கும் இடங்கள், குறிப்பாக, பாமக.,வுக்கு வழங்கியதற்குக் குறையாமல் அதாவது 7 தொகுதிக்குக் குறையாமல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கேட்டுள்ளது. ஆனால் அதிமுக., தரப்பில் அந்த அளவுக்கு தேமுதிக,.வுக்கு ஒதுக்கத் தயாரில்லை.

இந்நிலையில் தேமுதிக., கேட்கும்  7 தொகுதிகள் திமுக., கூட்டணியிலும் ஒதுக்க இயலாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போக, தேமுதிக., கேட்கும் குறைந்தபட்சம் 7 தொகுதிகளைக் கொடுத்துவிட்டால், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள்,  முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு சேர்த்து குறைந்த பட்சம் ஏழு முதல் எட்டு தொகுதிகள் ஒதுக்கியாக வேண்டும். ஆளுக்கு தலா ஒரு தொகுதி என்ற நிலையிலும் மதிமுக.,வோ, விடுதலைச் சிறுத்தைகளோ தயாராக இல்லை. இந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகள் என்றால் திமுக., வுக்கு 14 முதல் 15 தொகுதிகள் தான் கிடைக்கும் என்ற நிலையில், இவ்வளவு குறைவான தொகுதிகளில் போட்டியிட திமுக.,வில் எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இந்த நிலையில், கடும் இழுபறியில் உள்ளது திமுக.,வில் கூட்டணிக் கணக்கு. மேலும், தேமுதிக.,வில் தகுந்த நபர்கள் இல்லை, பெரும்பாலான முக்கியத் தலைகளும் வேறு கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர், முக்கியமாக உடல் நலமின்றி ஓய்வில் இருக்கும் விஜய்காந்த்தால் எதிர்பார்த்த அளவுக்கு பிரசாரம் செய்ய இயலாது, விஜயகாந்த்தின் பிரசாரம் இல்லாமல் அக்கட்சிக்கு ஆதரவு திரட்டுவது பெரும் சிரமம் எனவே அக்கட்சிக்கு மதிமுக.,வுக்கு ஒதுக்கும் எண்ணிக்கையிலான இடங்கள்தான் ஒதுக்கப் பட இயலும் என்றெல்லாம் திமுக., தரப்பில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

இரு அணிகளிலும் ஏற்பட்டுள்ள இந்தக் கூட்டணிச் சிக்கல்களுக்கு எல்லாம் மூல காரணமாக அமைந்தது பாமக., யாரும் எதிர்பாராத வகையில் செய்து கொண்ட அந்த 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை என்ற ஒப்பந்தம்தான்! அது போல், கூட்டணிக்குள் வேறு யார் வருவார்கள் என்றெல்லாம் கணக்கு போடத் தெரியாமல் எடுத்தவுடனே முதல் வேலையாக காங்கிரஸுடன் பத்து தொகுதிகளை ஒப்பந்தம் செய்து கொண்ட திமுக.,வின் செயல்பாடால், இப்போது தேமுதிக., உள்ளே வந்தால், தோழமைக் கட்சியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது மதிமுக.,வோ அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும்!


தினசரி செய்திகளின் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெறுங்கள்…
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?!

View Results

Loading ... Loading ...

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...