பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சியின் மகளிர் கூட்டத்தில், இந்துக் கோயில்கள் குறித்து மிக மோசமான சொல்லாடல்களைக் கையாண்டிருந்தார்.
திருமாவளவனுக்கு எதிராக, தமிழர்கள் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திருமாவளவன் தாம் நம்பும் ஹிந்து மத கடவுளர்க்கு எதிராக கொச்சையாகப் பேசி, தமது நம்பிக்கையை களங்கப் படுத்தி விட்டதாகக் கூறி, நடிகையும் பாஜக., உறுப்பினருமான காயத்ரி ரகுராம் டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.
அதில், “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள். நவ.27 காலை 10 மணிக்கு மெரினாவிற்கு தனியாக வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை நேரில் மிரட்ட தயாரா?” என சவால் விடுத்திருந்தார். இதைஅடுத்து காயத்ரி ரகுராமின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். தொடர்ந்து, காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் திருமாவளவன் இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதேநேரம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, தில்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேசியுள்ளார்.
அதில், ” விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து தர்மத்தில் உள்ள குறைபாடுகளை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாகத் தெரியலாம்.
அதை கலை என்ற அடிப்படையில் தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த கற்றுக் குட்டிகளுக்கு விடை சொல்லப் போகிறோம் என்ற முறையிலே, அவர்களுக்காக நாம் நமது சக்தியை விரயம் ஆக்குவது என்பது வீண் என என்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தோழர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள்.
நாம் மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற பதர்களுக்கு பதில் சொல்வதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
நடிகைகள் குறித்த திருமாவளவனின் அறுவெருக்கத்தக்க இந்தப் பேச்சுக்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருமாவளவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, மகளிர் அமைப்பினர் கொந்தளித்துப் போயுள்ளனர். நடிகையர் என்றால் இளக்காரமா என்று கேட்டு, மிகவும் கேவலமான வகையில் பெண்ணினத்தை தனது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவுடிகளிடம் சொல்வதா என்று கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஏற்கெனவே மற்ற சாதிப் பெண்கள், அவரவர் சாதியில் உள்ள ஆண்களைத் திருமணம் செய்ய மறுக்கிறார்கள், அவர்களுக்கு சரக்கு இல்லை மிடுக்கு இல்லை என்று, மற்ற சாதிப் பெண்கள் ஏதோ உடல் இச்சைகளுக்காகத்தான் பட்டியலின ஆண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று மிகக் கேவலமாக இழித்தும் பழித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில், இப்போதும் மகளிர் குறித்த தனது அசிங்கமான பார்வையால் திருமாவளவன் தான் யார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் காட்டியிருக்கிறார் என்று மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.