
இரு தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்த போது, திடீரென அரை மணி நேரத்துக்கும் மேல் மின் தடை எற்பட்டது. இன்று மத்திய அமலாக்கத்துறை சோதனைகளால் தமிழக மின் துறை அமைச்சர் ஷாக் அடித்துக் கிடக்கிறார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணத்தின்போது, விமான நிலையம் அருகே மின்சாரம் தடைபட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக., மூத்த தலைவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். கடந்த, 10ம் தேதி இரவு அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது, அங்கு மின்தடை ஏற்பட்டது. இது, 40 நிமிடங்களுக்குப் பிறகே சரி செய்யப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துள்ளது. வழக்கமாக, உள்துறை அமைச்சர் பயணத்துக்குப் பின், அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, உள்துறை அதிகாரிகள் தணிக்கை செய்வர். இதன்படி நேற்று தணிக்கை நடந்தது. இதில், சென்னையில் அமித் ஷா இருந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது உள்துறை அமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாகவே மத்திய உள்துறை எடுத்துக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு உள்துறை கடிதம் எழுதியுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரின் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு, தலைமைச் செயலகத்தில் அவரது அறை உள்ள்ட்டவற்றில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளதும், அவர் எந்நேரமும் கைது செய்யப் படக்கூடும் என்று உலாவரும் தகவலும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.