அப்போது நான் கேந்திராவின் சார்பில் அருணாச்சல பிரதேசத்தில் இருந்தேன். கேந்திராவின் ஆண்டுவிழா ஒன்றில் மாறுவேடப் போட்டிக்கு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பள்ளிக் குழதைகள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அருணாச்சல் பிரதேசத்தின் சார்பில் ஒரு குழந்தையை தயார் செய்து அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு முதல் நாளில் யார் யாரெல்லாம் என்னென்ன வேடம் அணியப் போகிறார்கள் என்று ஒருங்கிணைப்பாளர்கள் பேசிக்கொண்டோம். அருணாச்சல பிரதேசக் குழந்தை என்ன வேடத்தில் வரப்போகிறதுஎன்று தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருந்தது. அந்தக் குழந்தைக்குத்தான் பரிசு தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்கள். ஆனால், நானோ அதுசஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேன்.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே மிஷனரிகளுக்கு அதிக சுதந்தரம் தரப்பட்டிருந்தது. வனவாசிமக்களின் கலாசாரம், வாழ்வாதாரங்கள் எல்லாம் பாதுகாக்கப்படவேண்டுமென்ற நோக்கில் சுதந்தர இந்தியாவும் கூட வட கிழக்குக்கு என்று சற்று மாறுபட்ட பொருளாதார-தொழில்சார் கொள்கைகளைக் கொண்டிருந்தது.
வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் எல்லைப் பகுதியில் சென்று சேர சிரமமான புவியியலுடன் இருந்ததாலும் பிற இந்திய அரசால், மக்களால் (மாநிலங்களால்) எளிதில் தொடர்புகொள்ள முடியாததாகவுமிருந்தது.
இந்தக் காரணங்களால் வடகிழக்கு மாநில மக்கள் இந்தியாவால் தாம் புறக்கணிக்கப் பட்டதாக நம்பிக்கொண்டிருந்தனர். கேந்திரா அந்த எண்ணத்தை நீக்கி அவர்களை மைய நீரோட்டத்துடன் இணைக்க வடகிழக்கில் ஏராளமான பள்ளிகள், மருத்துவமனைகள் என முழுவீச்சில் சேவையில் ஈடுபட்டிருந்தது. எனவே, வடகிழக்கு மாநிலத்தினர் மீது கேந்திராவினருக்கும் கேந்திரா மேல் அவர்களுக்கும் எப்போதுமே கூடுதல் அன்பு உண்டு.
அந்த ஆண்டு வட கிழக்குக் குழந்தைக்குப் பரிசு தரவேண்டும் என்று முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழந்தையை அழைத்து வந்தது நான் என்பது அவர்களுக்குக் கொஞ்சம் கலக்கத்தைத் தந்தது. அதோடு, அந்தக் குழந்தை எந்த வேடத்தில் வரப்போகிறதுஎன்று என்னிடம் கேட்கப்பட்டபோது, அது சஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேன். அந்தக் குழந்தையிடம் எவ்வளவோ தனியாக நயமாகப் பேசிப் பார்த்தார்கள். அவனும் சஸ்பென்ஸ் என்று மழலை மொழியில் சொல்லிவிட்டான்.
நிகழ்ச்சி தொடங்கும் நேரம் வந்தது. ஒவ்வொரு மாநில ஒருங்கிணைப்பாளரும் தமது குழந்தையுடன் அரங்குக்குள் நுழைந்தார். அறையில் இருந்து ஒவ்வொரு குழந்தையாக அரங்குக்குள் நுழைய பலத்த கரகோஷம் அவர்களை வரவேற்றது. விவேகானந்தர், வீர சாவர்க்கர், நேதாஜி, பாரதி, வீர சிவாஜி, ஜான்சி ராணி, சரஸ்வதி என ஒவ்வொரு மாநிலக் குழந்தையும் வர அந்தந்த மாநில பிளாக்குகள் முதலில் கைதட்டி வரவேற்றன. பின் அனைவரும் சேர்ந்துகொண்டனர்.
அடுத்ததாக வட கிழக்கு மாநிலக்குழந்தை என்று பெயர் அறிவித்ததும் குழந்தை வருவதற்கு முன்பாகவே ஒட்டு மொத்த அரங்கும் விண் அதிரக் கைதட்டியது. முதலில் நான் வந்தேன். அந்த கைதட்டல் எனக்குத்தான் என்ற பாவனையில் அதற்கு நன்றி தெரிவித்தேன். கூட்டம் என் வேடிக்கையைப் புரிந்துகொண்டு உரத்த குரலில் சிரித்தது…
அடுத்ததாக, மெள்ள வட கிழக்குக் குழந்தை உள்ளே நுழைந்தது. அதுவரையில் இருந்த உற்சாகமும் கரகோஷமும் ஸ்விட்ச் போட்டதுபோல் பட்டென்று நின்றது. அரங்கில் பேரமைதி நிலவியது. குழந்தை நேரு உடையில் வந்திருந்தது!
சக ஒருங்கிணைப்பாளர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். படிநிலையில் எனக்கு மேல்நிலையில் இருந்தவர் அருகில் சென்று அமர்ந்தேன். முகத்திலடித்தாற்போல் சட்டென்று எழுந்து சென்று வேறு இடத்தில் அமர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியது. நேரு உடையில் ஒருவர் மேடையில் ஏறுவதா என்று அனைவருக்கும் கடும் கோபம். பள்ளி நிகழ்ச்சி என்றால் அதுவேறு விஷயம். இது கேந்திராவின் நிகழ்ச்சி. எனவே அதையாரும் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அந்தக் குழந்தையை மேடை ஏறாமல் தடுத்தால் வட கிழக்கு குழந்தையை / மக்களை அவமதித்ததுபோல் ஆகிவிடும். வேறு உடை கொடுத்து தயார்படுத்தவும் நேரம் இல்லை. என்ன செய்ய என்று தெரியாமல் தவித்தார்கள். நான் ஒற்றைப் புன்முறுவல் தேடி ஒவ்வொரு முகமாகப் பார்த்தேன். ஒவ்வொருவரும் அவரவருக்குரிய விதத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
அருணாச்சலபிரதேசக் குழந்தையை கடைசியாக மேடை ஏற்றுவதுஎன்று முடிவு செய்தனர். நிகழ்ச்சி நல்லவிதமாக நடந்தது. ஜான்சி ராணி வேடமிட்ட குழந்தைக்குப் பரிசு என்று உடனடியாக தீர்மானிக்கப்பட்டது. என் அருகில் இருந்த நண்பர் போன்ற ஒருவர் கெட் திங்ஸ் பேக்ட் என்று அன்புடன் சொன்னார். பொறுத்திருங்கள் என்று சொன்னேன்.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் வந்தது. வடகிழக்குக் குழந்தை மேடைக்கு அழைக்கப்பட்டது. கூட்டம் சம்பிரதாயமாகக் கைதட்டியது. குழந்தை பேசத் தொடங்கியது.
நான் ஜவஹர்லால் நேரு…
நான் இந்துவாகப் பிறந்தது ஒரு விபத்து…
(கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பேசியது போதும் என்று இறங்கவைக்கும்படி செய்தி பறந்தது)
நான் நம் தேசத்தின் முதல் பிரதமரானது அதைவிடப் பெரும் விபத்து… ஃபேடல் ஆக்ஸிடெண்ட்!
(கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது)
நம் தேசத்தின் மணிமகுடம் போல் இருக்கும் காஷ்மீரத்தில் பிறந்தேன். மதிப்புக்குரிய சர்தார் படேல்ஜி 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்.
நான் என் சொந்த ஊரையே இந்தியாவில் இருந்து விலக்கிவைத்தேன்.
களத்தில் இருந்த ராணுவத்தலைமை ஒரு வார அவகாசம் கொடுங்கள்… பதான் –பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களை நம் எல்லையைவிட்டு விரட்டியடிக்கிறோம் என்று கெஞ்சியதைப் பொறுபடுத்தாமல் ஐநாவுக்கு விஷயத்தைக் கொண்டுசென்று பெரும் தவறிழைத்தேன்.
சீனப் போரிலும் நம் ராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்காமல் நம் தோல்விக்கு வழி வகுத்தேன்.
காந்தியின் சீடனாக நடித்தேன். அவர் முன்வைத்த சுதேசி, கிராமப் பொருளாதாரம், கிராம ராஜ்ஜியம் ஆகியவற்றை புறக்கணித்து மேற்கத்திய பாணி வளர்ச்சியே நம் வளர்ச்சி என்று தேசத்தை தவறாக வழிநடத்தினேன்.
ஜே.சி.குமரப்பா போன்ற பொருளாதார மேதைகள், வினோபா சமூக சீர்திருத்தவாதிகள் போன்ற காந்தியவாதிகளை ஓரங்கட்டினேன்.
நான் ஆரம்பித்த இந்து நீக்கம் போலி மதச்சார்பின்மையாக மாறி இந்து விரோதமாக இன்று ஆகிவிட்டிருக்கிறது.
நான் நம் தேசத்தின் வழிகாட்டி என்பார்கள்.
ஆம் நம் தேசத்தின் இந்த வீழ்ச்சிக்கு நானே வழிகாட்டி.
நம் தேசத்தை உளி கொண்டு செதுக்கியவன் என்பார்கள்.
ஆம்… ஆனால், துரதிஷ்டவசமாக நான் சிற்பி அல்ல…
நல்லதோர் கல்லை சிலையாக்காமல் படிக்கல்லாகக் கொத்திய கொத்தன்
ஓ… என் அருமை தேசத்தீரே…
என் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடாதீர்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கோகுலாஷ்டமியை நம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுங்கள்.
அதுவே என்னை தேர்ந்தெடுத்தற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் பிராயச்சித்தம்.
அதுவே எனக்கு நீங்கள் தரவேண்டிய முதல் தண்டனை.
ஜெய் சுதேசி…
ஜெய் ஹிந்துஸ்தான்!
*
உண்மையை ஏற்கும் பக்குவமும் துணிவும் கொண்ட அந்த சபையில் அந்த ஆண்டு அந்தச் சிறுவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
*
(இடமும் வலமும் அலையும் சிறு சுடர் – புனைவுச் சுய சரிதையில் இருந்து)