Home Blog Page 5666

மதம் மாற நிலம்: சிறுபான்மையினர் கொதிப்பு

சேலம்: சேலத்தில், இலவச நிலம், பணம் கொடுத்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மதம் மாற்றும் முயற்சி நடந்தது. தகவலறிந்து சென்ற, ஒரு மதத்தினர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பிரச்னை-சேலம், களரம்பட்டி யில், கிறிஸ்தவ மதத்துக்குரிய, ஜீவ ஒளி திருச்சபை கட்டடம் உள்ளது. இங்கு, பாதிரியாராக, ஐசக் என்பவர் உள்ளார்; இவர், இஸ்லாமிய மதத்தில் இருந்து, கிறிஸ்தவ மதத்துக்கு, தன்னுடைய குடும்பத்தினருடன் மதம் மாறியவர். இதை தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரை, கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கும் முயற்சியை, இவர் மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்காக, இலவச நிலம், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறிஉள்ளார். நேற்று காலை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, லைன்மேடு, முகம்மதுபுறா உள்ளிட்ட, பகுதிகளில் இருந்து, இஸ்லாமிய பெண்கள், 50க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, திருச்சபையில் அமர வைத்துள்ளார். பின், அந்த பெண்கள் அணியும், சில நகைகளை கழற்றி விடுமாறு கூறியுள்ளார். மதம் மாற்றம் நடப்பது தொடர்பான தகவல், சேலம் கோட்டை, த.மு.மு.க., நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள், சம்பவ இடத்துக்கு சென்ற போது, திருச்சபையின் உள்ளே, முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, பாதிரியார் ஐசக்கிடம், த.மு.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தினரிடையே எழுந்த திடீர் பிரச்னை, போலீசார் கவனத்துக்கு சென்றது.போலீசில் புகார் –போலீசார், களரம்பட்டி வந்து, இரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் சமாதானப் படுத்தினர். தொடர்ந்து, திருச்சபையில் இருந்த பெண்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. த.மு.மு.க., அம்மாபேட்டை மண்டல துணை செயலர் இப்ராகிம் கூறியதாவது:

களரம்பட்டியில் உள்ள சர்ச்சில், கிச்சிப்பாளையம் கரீம்காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களை, மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று, சம்பந்தப்பட்ட பாதிரியாரிடம் விசாரித்தோம். அவர், ‘அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்படி, நிலம் கொடுப்பதற்காக அழைத்து உள்ளோம்’ என்றார்.

ஆனால், மதம் மாற்றும் வகையில், சில தகவல்களை அந்த பாதிரியார் கூறியிருப்பது, எங்களுக்கு தெரியவந்தது. இதனால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின், இந்த பிரச்னை போலீசாருக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், எங்களிடம் பேச்சு நடத்தினர்.

அப்போது, நடந்த சம்பவங்களை தெரிவித்தோம். ‘புகார் மனு கொடுங்கள்; வழக்கு பதிவு செய்வதற்கான முயற்சி எடுக்கிறோம்’ என்றனர். கிச்சிப்பாளையம் போலீசில் புகார் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்

அதிமுக இருக்காது!: தமிழருவி மணியன்

*முதுகெலும்பு இல்லாத அடிமை மனப்பான்மை கொண்ட ஓ.பி.எஸ் நேர்மையானவர் அல்ல. சேகர் ரெட்டியின் கூட்டாளியான இவரும் உச்ச நீதிமன்றத்தில் ஊழல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட சசிகலாவும் அதிமுகவிற்கு முடிவுரை எழுதி வருகிறார்கள்.
*பொது தேர்தல் எப்போது வந்தாலும் அதன் பிறகு அதிமுக என்ற அரசியல் கட்சி இருந்தது என்கின்ற நிலை தோன்றுவதை தடுக்க முடியாது என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேச்சு!

லக்னோவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐ.எஸ். இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுப்பு!

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடையவர் என்று லக்னோவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுத்துள்ளார்.
போபால் – உஜ்ஜைன் ரயில் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய கான்பூர் மாவட்டம் ஜாஜாமவு டிலா கிராமத்தைச் சேர்ந்த சஃபிபுல்லா என்ற இளைஞர், லக்னோவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இளைஞருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை சர்தாஜ், தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவன் தமது மகனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவமானம் தேடித் தந்த சஃபிபுல்லாவின் உடலை வாங்க முடியாது என்று கூறியுள்ள சர்தாஜ், தமது மூதாதையர்கள் அனைவரும் இந்திய மண்ணில் பிறந்ததாகவும், அனைவரும் இந்தியர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நெல்லை வருகை

  நெல்லை வருகை தந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வரவேற்றார்  நாளை  காலை 11 மணிக்கு பாளை மாதா மாளிகையில்  நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் முடிக்கப்பட்ட 1098 பணிகள் ₹235.61 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தும், நல திட்ட உதவிகளும் வழங்குகிறார்

செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 5, 2017 அன்று, சென்னை அம்பத்தூர் விநாயகபுரம் கண்ணகி தெருவின் இல்லமொன்றில் எளிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 90 வயதை எட்டிய அந்த மனிதரது அன்பில் திளைக்கவும், வாழ்த்தவும், அவரிடத்தில் ஆசி பெற்றுச் செல்லவும்  குழுமி இருந்த நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் நிறைந்திருந்தது அவை. அந்நாளைய வடாற்காடு மாவட்டத்தின் சிற்றூரான சொரையூரில் பிறந்து வளர்ந்து உயர்நிலைக் கல்வி மட்டிலும் முடித்து வருவாய்த் துறையில் பணிக்குச் சேர்ந்து தமது கடுமையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து டெபுடி கலெக்டர் பொறுப்பில் பணி ஓய்வு பெற்ற எங்கள் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி அவர்கள்தான் இந்த பெருமைக்குரியவர். 
இந்த உற்சாகமான பொழுதில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்ற பேரார்வத்தில் மிகக் குறுகிய நேரத்தில் இறங்கிய முயற்சிக்கு நூல் வடிவம் அளித்ததில் பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர்களது ஊக்கமிக்க ஒத்துழைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. அவருக்கு நன்றி உரித்தாகிறது.
தந்தையைக் குறித்த கட்டுரை உள்ளிட்டு ஆங்கில இந்து, தமிழ் இந்து, நவீன விருட்சம் மற்றும் தீக்கதிர்-வண்ணக்கதிர் பத்திரிகைகளில் பல்வேறு தருணங்களில் வந்திருந்த படைப்புகளின் தொகுப்பான எஸ் ஆர் வி 90 என்ற இந்த நூலின் பிரதியை, தம்மை வாழ்த்தித் தம்மிடம் ஆசி பெறவந்த அன்பர்கள் அனைவருக்கும்  எஸ் ஆர் வி வழங்கி மகிழ்ந்தார்.
தொகுப்பின் முகப்புக் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. உங்கள் வாசிப்புக்கும், பகிர்வுக்கும்.
அன்புடன்
எஸ் வி வேணுகோபாலன் 
***
செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

சொரையூர் ரங்காச்சாரி வரதன் என்பது ஒரு வேளை பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அதில் பதிவாகி இருக்கக் கூடிய முழு பெயர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு ஊர்களில் அரசு உத்தியோகம் பார்த்த இடங்களில் எல்லாம் எஸ் ஆர் வரதாச்சாரி என்பதே யாவரும் அறிந்த பெயர்.  (அந்நாளைய) வடாற்காடு மாவட்டத்தில் மாம்பாக்கம் – வாழைப்பந்தல் சாலையில் குறுக்கே பாறைமோடு வழியே கிளைப்பாதையில் பெரிய ஏரிக்கரையைக் கடந்ததும் தட்டுப்படும் சிற்றூரான சொரையூரில் வரதன் என்பதாகவே வழங்கப்பட்ட பெயர் என்றாலும், மின்னும் கறுத்த நிறத்தின் காரணமாக ஊரில் நிலைத்த பெயர் கப்புக்குட்டி (கறுப்புக்குட்டி!). அரசு வாகனத்தோடே பார்த்துப் பழக்கப்பட்ட குழந்தைகள் அவரை அன்போடு அழைத்த பெயர் ஜீப் தாத்தா.

வருவாய்த்துறையின் மிக சாதாரண படிக்கட்டில் கால் வைக்கும்போதே, மேலதிகாரியின் பணி நிலைமைகள், அதிகார வரம்பு பற்றி வளர்த்துக் கொண்டிருந்த ஞானம் அபாரமானது (ஒரு முறை, தவறிழைத்த மனிதருக்கு அபராதம் விதித்த தனது உயரதிகாரி மாஜிஸ்திரேட்டை அவரது அறைக்குள் அழைத்துவந்து அவரது வரம்புக்கு அதிகமான தொகையைத் தண்டனையாக வழங்கினால் செல்லாது என்று விதிகளை நினைவூட்டி அதைக் குறைக்க வைத்த துணிவை எப்படிப் புகழ்வது!). பின்னர் படிப்படியாக தாலுகா உணவு வழங்கும் அதிகாரியாக, தாசில்தாராக, மாவட்ட உணவு வழங்கும் பொறுப்பாளராக, டெபுடி கலெக்டராக உயர்ந்த அவரது உழைப்பின் வலுவும், அயராத செயல்பாடுகளும், அசாத்திய உளத்திண்மையும், நேர்மையின் ஒளிவீச்சும், யாருக்கும் அஞ்சாத நெறிமிக்க வாழ்க்கைத் தடங்களும் அவரது கம்பீரத்தை மேலும் உயர்த்தின.
கல்லூரிக் கல்வி பெறாத எளிய குடும்பச் சூழலிலிருந்து தம்மை தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கிய-இலக்கண நயமும் தூய்மையும் பெருமையும் துலங்கும் வண்ணம் பேசவும் எழுதவும் அவர் வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் வியப்புக்குரியது. அலுவலக கோப்புகளில் சரிவர விவரங்களைக் குறித்து அனுப்பாத பணியாளர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருப்பி அனுப்பும் கோபமிக்க தருணங்களில்கூடக் கவிதைத் தமிழ் தெறிக்கும். ஆனால் ஏழை எளிய மக்கள்பால் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் விஷயங்களில் அக்கறையும், கரிசனமும், பொறுப்புணர்வும் மேலோங்கி நிற்கும். உயர்குடியில் பிறந்தவரை எப்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் அரிசன நலத்துறை உயரதிகாரியாக நியமிக்கலாம் என சிலர் முரசொலித்துக் கேட்டபோது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தகைசான்ற தமது பண்பாக்கத்தால் அஞ்சாது தமது கடமைகளைச் செம்மாந்த முறையில்  நிறைவு செய்தவர் அவர்.

எத்தனை கெடுபிடிகள், வேலையில் சமரசமற்ற தீவிரம், அயராத உழைப்பு இருந்தாலும், குணமென்னும் குன்றேறி நிற்பதால், கணமேயும் தங்கி இராத கோபமும், எப்போதும் இயல்பாகப் பெருகும் நகைச்சுவை உணர்வும், வாய்விட்டுச் சிரிக்கும் அன்புள்ளமும், எளியவர்க்கு உதவும் நல்லெண்ணமும், கொடைத்தன்மையும் யாவரையும் கவர்ந்திழுக்கும் காந்த மனிதராக்கி இருக்கிறது.
1948ல் கே சி ராஜகோபாலாச்சாரி – ராஜலட்சுமி இணையரின் மூத்த புதல்வி சுகந்தாவின் கரம் பற்றிய இல்லற வாழ்வில் கீதா, ரங்கராஜன் (ரவி), வேணுகோபாலன் (ரமேஷ்) மூன்று மக்கட்பேறு வாய்த்தபின் காலம் பறித்துக் கொண்டது அந்தக் காதல் மனையாளை. பெரியப்பா மகனும், ஆதர்ச வழிகாட்டியான எஸ் வி சந்தானம் அவர்களது அன்பு முயற்சியால்,  1966ல் பண்ருட்டியை அடுத்த கோட்லாம்பாக்கம் எனும் சிற்றூரின் வைதீகர் குப்புஸ்வாமி – குப்பம்மாள் இணையரின் செல்ல மகள் மைதிலியை மனைவியாக ஏற்கவும், சிற்றன்னையோ மாற்றன்னையோ என்றல்லாது சொந்தத் தாயாகக் குழந்தைகளை வரித்துக் கொண்ட அவருடன் இயைந்த குடும்ப வாழ்வில் வீரராகவன், ஆண்டாள், தேசிகன், சுதா லட்சுமி என்ற செல்வங்கள் வாய்த்தனர். ஒரு குக்கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்து சவால்மிக்க நகர, மாநகரச்  சூழலில் ஈடுகொடுத்து நின்று இந்த ஐம்பதாண்டு இல்லறத்தில் அரசுப்பணி நிறைவிற்குப்பின் சளைக்காத வகையில் உறவினர்-நண்பர்கள் குடும்ப நிகழ்வுகள், சொந்தவூர் கோயில் சிறப்பு ஆராதனைகள் என ஓரிடம் விடாது சென்று வரத்தக்க உற்சாகமிக்க உடல் நலத்தோடும், உளநலத்தோடும் அவரைப் பேணிக் காத்துப் பெருமிதம் பொங்க வைத்தவர் மைதிலி.
தமது எண்பதாம் வயதின் நிறைவு விழாவும், மூத்த மகன் ரங்கராஜன் அறுபதாண்டு நிறைவு நிகழ்ச்சியும் பரவசத்தோடு நடத்தி இன்று தொண்ணூறு வயது நிறைவில், மாப்பிள்ளைகள் ரங்கநாதன், சுந்தர், கிருஷ்ணகுமார் மருமகள்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, லட்சுமி, சுபஸ்ரீ – பேத்திகள் அபிநயா, இந்து, சுதந்திரா, பிரியங்கா, அவந்திகா -பேரன்கள் ராஜேஷ், அரவிந்த், நந்தா, நாராயணன், கீர்த்திவாசன் மற்றும் நெருங்கிய சுற்றமும் நட்பும் குதூகல கொண்டாட்ட சங்கமத்தில் நிறைந்துள்ள அவையில் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் வண்ணம் நடுநாயகமாக நிற்கும் எங்கள் அன்பின் ஊற்றுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்……

வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலியுடன் போலீசில் தஞ்சமடைந்த இஸ்லாமிய இளைஞர்

yasar primila 1 - 2026
நிச்சயித்த மாப்பிள்ளையை உதறிவிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனை மணந்தார் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்
நிச்சயித்த மாப்பிள்ளையை கை விட்டு விட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரின் மகள் காதலனை மணந்தார். கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தபோது, தனது தந்தையிடம் நகைகளை கழற்றிக் கொடுத்து விட்டு, கண்ணீருடன் விடை பெற்றார்.
பிரமிளா–யாசர் அராபத் 
சென்னை பம்மலைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 33). இவரது தந்தை கணேசன் சென்னையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். பட்டப்படிப்பு படித்துள்ள பிரமிளாவுக்கு, கடந்த வாரம் சென்னை புரசைவாக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். திருமணத்தை 2 மாதங்கள் கழித்து, நடத்த முடிவு செய்தனர். இதனால் மாப்பிள்ளை, நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் காஷ்மீர் புறப்பட்டு சென்றார். பிரமிளா, சென்டிரல் ரெயில் நிலையம் சென்று அவரை வழி அனுப்பி விட்டு வந்தார்.
மாப்பிள்ளையை வழி அனுப்பி வைத்த பிரமிளா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் யாசர் அராபத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரமிளாவின் இந்த அதிரடியான நடவடிக்கையால் அவரது தந்தை சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் 
பிரமிளா, தனது காதல் கணவர் யாசர் அராபத்துடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த தகவல் தெரிந்து, பிரமிளாவின் தந்தை, தாயார், சகோதரன், உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பிரமிளாவின் தாயார், அவரை பார்த்தவுடன், கமிஷனர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். அவரை மயக்கம் தெளிய வைத்து அழைத்துச் சென்றனர். சகோதரன், பிரமிளாவின் காலில் விழுந்து கெஞ்சினார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, இப்படி நடந்து கொண்டாயே, தயவு செய்து, எங்களுடன் வந்து, அப்பாவின் மானத்தை காப்பாற்று, என்று கண்ணீர் விட்டு அழுதார். பிரமிளா, பதில் ஏதும் சொல்லாமல், காதல் கணவர் யாசர்அராபத்தின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கல்லாக நின்றார்.
நகைகளை கழற்றி கொடுத்தார்…… 
எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டாயே, நான் வாங்கி கொடுத்த நகைகளை மட்டும் அணிந்திருக்கிறாயே, என்று சப்–இன்ஸ்பெக்டர் கேட்க, பிரமிளா அடுத்த கணமே, காதில் போட்டிருந்த கம்மல், கைகளில் போட்டிருந்த வளையல், கழுத்தில் போட்டிருந்த சங்கிலி என்று சுமார் 10 சவரன் நகைகளை கழற்றி தந்தையிடம் கொடுத்தார். நிச்சயதார்த்தம் வரை வந்து விட்டு, என்னை அவமானப்படுத்தி விட்டாயே, நீ நன்றாக வாழு, என்று ஆசி வழங்கி விட்டு, கணேசன் போய் விட்டார்.
தந்தை–மகளின் இந்த பாச போராட்டத்தை, கமிஷனர் அலுவலக போலீசார் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இது பார்ப்பவர்களை கலங்க வைக்கும் வகையில் இருந்தது.

ஆதார சத்துணவு யாருக்கு?

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாம். .
இதற்கு பின்னனியில் நடந்த ஒரு சம்பவம்…
தமிழகத்தில் ஒரு பிரதான ஊரில் சத்துணவு பணியாளர் பணிக்கு லஞ்சமாக 3,00,000 பெறப்பட்டதாம்… ஆனால் அந்தப் பணிக்கு அரசு சம்பளம் ரூ4500 மட்டுமே. . இதுக்கா இவ்ளோ லஞ்சம் னு யோசிச்சா… கதை வேற திசையில போகுதாம்…
அதாவது அந்த ஊரில் மதிய உணவு உண்ணும் குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் மூன்று மட்டுமே. .
ஆனால் பதிவில் 147 குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டு அதற்குரிய உணவுப் பொருட்கள் பெறப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதில் ரூ 15000 -20000 அந்த சத்துணவு பணியாளருக்கு கிடைக்கிறதாம்

ஒரு ரிசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம் – ஜியோ அட்டகாசம்

*எந்தெந்த ரீசார்ஜில் இந்த சலுகை கிடைக்கும்.?*
ஏற்கனவே போதுமான புரட்சிகளை நிகழ்த்திவிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது ஒரு புதிய லிமிடெட் ஆபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ப்ரைம் சேவையின்கீழ் இணையும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் 'ஒரு ரிசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம்" என்ற புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.!
இந்த சலுகையின்கீழ் ஒரு புதிய ரிலைன்ஸ் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களாக நீங்கள் என்னென்ன சலுகைகளை பெறலாம்.? எந்தெந்த ரீசார்ஜில் இந்த சலுகை கிடைக்கும் என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.
*5ஜிபி இலவசம்*
இந்த புதிய சலுகையின்கீழ் ரூ.303/- என்ற மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் பயனர் ரூ.201/ ரீசார்ஜ் மதிப்புள்ள 5ஜிபி அளவிலான தரவை கூடுதலாக பெறுவர்.
*10ஜிபி இலவசம்*
மற்றும் இந்த அட்டகாசமான ஜியோ சலுகையின்கீழ் ரூ.499/- ரீசார்ஜ் மற்றும் அதற்கும் மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால் கூடுதலாக 10ஜிபி அளவிலான இலவச தரவை பெறலாம். இந்த சலுகையை அனுபவிக்க நீங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பே ரீசார்ஜே நிகழ்த்த வேண்டும்.
*ஜியோ ப்ரைம்*
நினைவூட்டும் வண்ணம் மார்ச் 31-ஆம் தேதியோடு ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய இலவச சேவைகள் முடிவிற்கு வருகிறது அதற்கு பின் ஜியோ ப்ரைம் கட்டண சேவைகள் ஆரம்பிக்கிறது. அதன் கீழ் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பயன்பாட்டு எல்லை கொண்ட தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை அனுபவிக்கலாம்.
*நன்மைகளில் வேறுபாடு*
ரூ.499/- ரீசார்ஜின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி என்ற டேட்டா பயன்பட்டு எல்லை பெறலாம் என்பதும் ரிலையன்ஸ் ப்ரைம் சந்தா பயனர்கள் மற்றும் ப்ரைம் சந்தா பயன்ரகளாய் அல்லாதவர்கள் என இரண்டு தரப்பினருமே ஜியோ ப்ரைம் சேவைகளை அனுபவிக்கலாம். ஆனால், 80% அளவில் நன்மைகளில் வேறுபாடு இருக்கும். 

பேஸ்புக்கில் புதிய அப்டேட்: வரப்போகிறது டிஸ்லைக் பட்டன்

பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் டிஸ்லைக் பட்டனை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள், செய்திகள், புகைப்படங்களுக்கு நமது உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் ரியாக்‌ஷன் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வசதியில் பேஸ்புக் சில புதிய ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
பேஸ்புக்கில் லைக் பட்டன்கள் மட்டுமே இதுவரை உள்ளது. இந்நிலையில் பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பில் டிஸ்லைக் பட்டனையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300 பில்லியன் பயனர்கள் ரியாக்‌ஷன் பட்டன்களை பயன்படுத்தியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நமக்கு பிடிக்காத பதிவுகளுக்கு இந்த டிஸ்லைக் பட்டனை பயன்படுத்தலாம். கட்டைவிரலை கீழே கவிழ்த்தது போல் உருவாக்கபட்டுள்ள இந்த புதிய எமோஜி சோதனை முடிந்து பேஸ்புக்கில் அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறிய பெண் கைது

2012ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதியில் பங்களா ஒன்றை எடுத்துத் தனியே தங்கியிருந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்த இந்தப் பெண்ணைப் பற்றி பீலா பிரியா என்ற தலைப்பிட்ட கட்டுரை மூலம் முதன் முதலில் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டியது குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்தான். முதலில் அவரை நெருங்கவே தயக்கம் காட்டிய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் பின்னர் சுதாரித்துக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர்மீது வழக்குகளைப் பதிந்து அவரைச் சிறைக்கு அனுப்பி வைத்தது.
கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் கடைக்கோடியில் ஒதுக்குப்புறமான பங்களா வீடு ஒன்றில் வசித்து வந்த இவர் ஒரு வி.வி.ஐ.பி.க்குரிய அந்தஸ்துடனேயே வாழ்ந்திருக்கிறார். பிரியாவைச் சந்திக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியம். முதல்வர் ஜெவின் மகள் நான் என்று கதையளந்த இவரது வார்தைகளை நம்பி சிபாரிசுகளுக்காக இவரது வீட்டிற்கு இரசியமாக வந்து சென்ற வி.ஐ.பி.க்கள் ஏராளம். 
பிரியா விட்ட கதையயை உண்மையென நம்பிய இளைஞர்கள் மூவரும் தர்மபுரி மாவட்டம் ஜிட்டண்ணஅள்ளி பஞ்சாயத்துத் தலைவரும் பெருஞ்செல்வந்தருமான கோவிந்தன் என்ற அதிமுககாரரை சந்தித்து பிரியா தங்களிடத்தில் சொன்ன கதையை அவரிடத்தும் சொல்லி ஒரு மாதத்துக்குள் திரும்பத் தருவதாகக் கூறி பிரியாவுக்காக 5கோடி ரூபாயைக் கேட்டு நெருக்குதல் தந்துள்ளனர்…. ஆனால், இதனை நம்பாத அ.தி.மு.க.காரரான கோவிந்தன் மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் 24.11.2011 தேதியில் பிரியா மீது ஒரு புகார் தந்தார். கோவிந்தன் தந்த அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் மிகவும் யோசித்துத் தடுமாறியது. பின்னர் அவரிடம் பணம் கேட்டு வந்த இளைஞர்களை மட்டும் வருமானவரி அதிகாரிகளாக நடித்துப் பணம் கேட்டதாக வழக்கொன்றைப் போட்டு சிறைக்கனுப்பியது. 
அதிமுக வி.ஐ.பிக்கள், ஆன்மீகப் புள்ளிகள், பெரும் செல்வந்தர்கள் பலரிடமும் ஜெயலலிதாவின் மகளாகத் தன்னைச் சொல்லிக் ஏமாற்று வேலைகளை ஒரு பெண் செய்து வருவது மேலிடத்தின் கவனத்தை எட்ட உடனடியாக அந்தப் பெண்ணைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே களமிறங்கிய போலீஸ் பிரியாவைக் கைது செய்திருக்கின்றனர். தன்னைக் கைது செய்ய வந்த போலீசிடமும் பிரியா தான் முதல்வரின் மகள்தான் என்று அசராமல் கூறியிருக்கிறார். 
முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரால் விசாரிக்கப்பட்ட பிரியா மீதான மோசடி வழக்கு பிறகு சிபிசிஐடியினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த மேகநாதன் தன்னுடைய மகனை மருத்துவக் கல்லூரியில் தனது செல்வாக்கைக் கொண்டு சேர்த்து விடுவதாகக் கூறி 30 இலட்ச ரூபாயினை பிரியா மோசடி செய்துவிட்டதாகத் தந்த புகாரினையடுத்து ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி சேலம் பெண்கள்  கிளைச் சிறைச்சாலையில் காவலில் இருந்த பிரியாவை சிபிசிஐடியினர் மீண்டும் கைது செய்தனர்.