ஜெ.வின் தோழிதானே ஆர்.கே.நகரில் போட்டியிடுங்க…: சசிகலாவுக்கு ஜெ.வின் குடும்ப நண்பர் கீதா கேள்வி
இன்றைய முக்கிய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
12 ஆண்டுகளுக்கு பின்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
மகா கும்பாபிஷேகம்:
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டு வரம் அளித்து வருவதாலும், தீராத நோய்களை தீர்த்து வருவதாலும் பக்தர்கள் அதீத நம்பிக்கை கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வருகிறார்கள்.
கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் பணிகள் வேகமாக நடந்தன.
இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகளுக்குப் பின், இன்று குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது
200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, காலை 7 மணியளவில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சசிகலா தேர்வு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா
தேர்வு செய்யப்பட்டதையடுத்து பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பி. தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் தலைவர் இளஅரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை
மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமசாமி,
கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,சரண் டைல்ஸ் சரவணன், மேலவைப் பிரதிநிதிகள் கணபதி, ஜெயராமன், மற்றும் ரவிச்சந்திரன், ராமசாமி, ஜெயராஜ், சுப்பிரமணியன்,சுடலைமணி, ராசையா, முத்துசாமி உட்பட ஏராளமான திரளான
அதிமுகவினர் கலந்துகொண்டனர்
மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை
தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக, 'மொபைல் போன் இன்டர்நெட்' பயன்பாட்டு கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., இன்று முதல் அதிரடியாக குறைக்கிறது.
பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 'ஜியோ' போன்ற புதிய நிறுவனங்களின் வரவை சமாளிக்க, வாடிக்கையாளர்களுக்கு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது, 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தில், புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பி.எஸ்.என்.எல்., 'சிறப்பு விலை வவுச்சர்'களுக்கு, கூடுதல், 'டேட்டா' வழங்குகிறது.
• வழக்கமாக, 291 ரூபாய் திட்டத்தில், '2 ஜி.பி., டேட்டா' வழங்கப்படும். இதன், அளவு, நான்கு மடங்கு கூடுகிறது. செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.
• 78 ரூபாய் திட்டத்தில், வழங்கப்பட்ட, '1 ஜி.பி., டேட்டா' இனி, 2 ஜி.பி.,யாக வழங்கப்படும். இதன் செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.
இந்த புதிய அறிவிப்பின்படி, பி.எஸ்.என்.எல்., 'பிரீ – பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, 1. ஜி.பி., டேட்டா, 36 ரூபாய்க்கு கிடைக்கும். 'ஜியோ' நிறுவனம், தற்போது, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.
அதன் வருகைக்கு பின், போட்டி நிறுவனங்கள், '1 ஜி.பி., டேட்டா' விலையை, 50 ரூபாய்க்கு கீழ் குறைத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., அவர்களை விட, கூடுதலாக விலையை குறைத்துள்ளது. இச்சலுகை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக பிரமுகரை போலீசில் ஒப்படைத்த அமைச்சர்
சென்னையில் சசிகலா வால்போஸ்டரை கிழித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரை பிடித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போலீசில் ஒப்படைத்தார்.
சென்னை அடையாரில் கீரின்வேஸ் சாலையில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட அமைச்சர்கள் வீடுகள், உயர் அதிகாரிகளின் வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் அதிமுக பொதுச்செலாளர் சசிகலாவை வாழ்த்தி ஏராளமான வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த வால்போஸ்டர்களை இன்றுகாலை மர்ம நபா் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மர்மநபரை பிடித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் பாண்டியன்(55) என்றும், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் என்பதும், சொக்கலிங்காபுரம் தற்போதைய கிளைச்செயலாளர் என்றும் தெரியவந்துள்ளது.
சசிகலா வால்போஸ்டரை கிழித்த அதிமுக பிரமுகரை, அமைச்சர் போலீசில் பிடித்து ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவை சந்தித்தார் பன்னீர்செல்வம்: எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தால் பரபரப்பு
போயஸ்கார்டன் விரைந்தார் ஓபிஎஸ்.அங்கு, சசிகலாவுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதை அடுத்து என்ன நடக்கப் போகுது? என்ற ஆவலுடன் தமிழக அரசியல் காத்திருக்கிறது.
சென்னை:
போயஸ்கார்டனுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 27ம் தேதிதான் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது என்றாலும் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் விரைந்துள்ளார். அங்கு பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக்குவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிபந்தனையின்றி பாஜகவில் இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா – எடியூரப்பா பரபரப்பு தகவல்
இதைதொடர்ந்து அவர் பா.ஜ.க.வில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள், எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்ந்து தங்களது கட்சியில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.
தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பாவை, எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைவேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டன. விரைவில் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் இணைவார் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூராப்பா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் சேருவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மீண்டும் ஒருமுறை அவருடன் பேசிய பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைவது உறுதியானது. எந்த நிபந்தனையும் இல்லாமல், அவர் எங்களது கட்சியில் இணைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயிலில் இனி இரவில் டிக்கெட் பரிசோதனை இல்லை
ரயில் பயணத்தின் போது, முன்பதிவு செய்த பெட்டிகளில், பயணிகளிடம் எவ்வித காரணமும் இன்றி டிக்கெட் பரிசோதனை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பெண்களிடம் தேவையில்லாமல் டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்வதாக ரயில்வே துறைக்கு புகார் சென்றது. உத்தரவு: இதனையடுத்து தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவு: முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். 10 மணிக்கு மேல் பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது. 10 மணிக்குள் கட்டாயம் டிக்கெட் பரிசோதனையை முடிக்க வேண்டும். உரிய காரணமில்லாமல், ஏற்கனவே டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்ட பயணிகளை தொந்தரவு செய்யக்கூடாது.
10 மணிக்கு மேல் கிளம்பும் ரயில்கள், போலீசார் புகார் அளிக்கும் பயணிகள் மற்றும் ரயிலில் இறக்கி விடப்பட வேண்டியவர்களிடம் மட்டுமே இரவில் சோதனை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியமில்லை: இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், தெற்கு ரயில்வேயில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. சில வருடங்கள் முன்பு வரை ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கெட் பரிசோதகர் இருப்பார். ஆனால், தற்போது ஒவ்வொரு டிடிஇ பொறுப்பில் 3 அல்லது 4 பெட்டிகள் அளிக்கப்படுகின்றன.
டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாத வரையில், இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியமில்லை எனக்கூறினர்.
ஜெயலலிதா வீட்டில் உள்ளவரெல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை: ஸ்டாலின்
சென்னை: '' ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக, மக்கள் ஓட்டளிக்கவில்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பி.டி.ஐ., செய்தி ஏஜென்சிக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: கோஷ்டிகள் உருவானது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில் கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இது, அரசு நிர்வாகத்தை பாதித்து விட கூடாது. ஒரு விஷயம் உறுதியாகி உள்ளது. தற்போது உள்ள அரசு, மக்கள் தேர்ந்தெடுத்த அரசாக இல்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையான அரசுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கோ, ஜெயலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராகவோ மக்கள் ஓட்டளிக்கவில்லை.
அமைச்சரவையில் பிளவு: பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இந்த அரசுக்கு இல்லை. அமைச்சரவையிலேயே பிளவு உள்ளது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகின்றனர். பொறுப்பான கட்சியான தி.மு.க., நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறது.
ஜனநாயக கட்டமைப்புக்கு உட்பட்டே எந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும். அது மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அ.தி.மு.க.,வின் உட்கட்சி விஷயத்தில் தலையிட தி.மு.க., விரும்பவில்லை. ஆனால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என தினம் தினம் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த நிலைமை, சட்டசபையையோ, ஆட்சி நிர்வாகத்தையோ பாதித்து விட கூடாது என்பது தான், ஒரு எதிர்க்கட்சி தலைவராக என் கவலையாக உள்ளது. அந்த பாதிப்பு வரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தி.மு.க.,விற்கு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

